தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் அருள்தரும் செண்பகவல்லி அம்மன் உடனுறை அருள்மிகு பூவனநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது
விழாவின் 9-ம் நாளான இன்று (13-ம் தேதி) காலை திருத்தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டடு திருவனந்தல் பூஜை, விளா பூஜை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சுவாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருளினர். இதையெடுத்து மேளதாளங்கள் முழங்க பக்தர்களின் விண்ணை முட்டும் கோஷங்களுடன் திருத்தேரோட்டம் தொடங்கியது.
விழாவில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளருமான கடம்பூர். செ. ராஜீ, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கா. கருணாநிதி ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.
முதலில் சுவாமி எழுந்தருளிய தேர் இழுக்கப்பட்டது அதனை தொடர்ந்து அம்மன் தேர் இழுக்கப்பட்டது. இரண்டு தேர்களும் ரத வீதிகளை சுற்றி வந்து நிலையை அடைந்தன. தேரோட்டத்தை முன்னிட்டு ஒயிலாட்டம், கோலாட்டம் நடைபெற்றது.தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில் நாளை (14-ம் தேதி) தீர்த்தவாரியும், 15-ம் தேதி தெப்ப உற்சவமும் நடக்கிறது.
திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான பொதுமக்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ராஜகுரு, உறுப்பினர்கள் சண்முகராஜ், திருப்பதிராஜா, நிருத்திய லட்சுமி, ரவீந்திரன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் ராஜகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவை முன்னிட்டு கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.