S.செய்யது தாஜுல் உசேன்
செய்தியாளர்
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.10 கோடி மதிப்பிலான 500 கிலோ எடையுள்ள பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
நாகை மாவட்டத்தில் கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட வனப்பாதுகாவலர் காஞ்சனா தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கைவிடப்பட்ட பிஎஸ்என்எல் குடியிருப்பின் பின்புறப் பகுதியில் மர்ம நபர்கள் கடல் அட்டைகளை பதுக்கி வைத்து, அவற்றை பதப்படுத்தி வந்தது தெரியவந்தது. அங்கு சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், பதப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த சுமார் 500 கிலோ கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகளின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.10 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இதுதொடர்பாக வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, கடல் அட்டைகளை பதுக்கி வைத்து பதப்படுத்திய மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடத்தல் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.