காரைக்கால் மக்கள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர்
AST.அன்சாரி பாபு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

காரைக்கால் பிராந்தியத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்ற காரைக்கால் போராட்டக்குழுவின் போராட்டத்தை தொடர்ந்து அன்றைய முதல்வர் ரங்கசாமி 25/03/2003 அன்று நிரவி பள்ளிவாசல் திறப்பு விழா நிகழ்ச்சியின்போது காரைக்கால் மாவட்டமாக்கப்படும் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 01/06/2005 ல் காரைக்கால் மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

முதல் ஆட்சியர் பணியமர்த்தப்பட்ட அன்றிலிருந்து நேற்றை தினம் 16/09/2026 வரை 21 ஆண்டுகளில் 22 மாவட்ட ஆட்சியர்கள் பணியாற்றிய பெருமை காரைக்கால் மாவட்டத்திற்கு மட்டுமே உள்ளது.

காரைக்கால் மாவட்ட வளர்ச்சிப் பட்டியலை விட, மாவட்ட ஆட்சியர்கள் பணிபுரிந்து சென்ற பட்டியல் நீண்டதாகும்.
இது புதுச்சேரி ஆட்சியாளர்களின் வரலாற்று சாதனை ஆகும்.

காரைக்கால் மாவட்டத்தின் 22 வது மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதியாக இஷிதா ராட்டி கடந்த 12.02.2026 அன்று பதவி ஏற்றார். அவர் எட்டு மாதங்கள் மட்டுமே பணியாற்றிய நிலையில் நேற்று 16.09.2026 பிற்பகல் இந்த ஒன்றிய நிர்வாகப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

என். ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி முதல்வராக ரங்கசாமி அவர்கள் பதவி இருந்த 2021 தொடங்கி ஐந்து ஆண்டுகள் மற்றும் தற்போதைய முதல்வராக பதவி ஏற்ற பின் உள்ள நான்கு மாதங்களில் 8 மாவட்ட ஆட்சியர்கள் காரைக்காலில் பணிபுரிந்து பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மாவட்ட ஆட்சியர் பணிநியமனம் செய்ய பட்டு மாவட்ட நிர்வாக செயல்பாடுகளை, மக்கள் தேவைகளை அறிந்து கொண்டு தீர்த்து வைக்க கிடைக்கும் கால அவகாச காலகட்டத்தில் அவரை பணியிடம் மாற்றம் செய்வது காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தை மக்கள் பணி செய்ய விடாமல் தடுக்கும் மறைமுக யுக்தியாகவே கருதப்படும்.
காரைக்கால் புறக்கணிப்பின் புதிய ஒரு அவதாரமாக முதல்வர் செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றால் காரைக்கால் தனி யூனியன் பிரதேசமாகி புதுச்சேரி ஆட்சியாளர்களின் புறக்கணிப்பின் கோரப் பிடியிலிருந்து தப்பித்து காரைக்காலுக்கு சுதந்திரம் கிடைக்கும் என்ற நம்பிக்கை தளர்ந்து வருகிறது.

ஒருபுறம் தொடரும் அரசின் புறக்கணிப்பு நடவடிக்கைகள், மற்றொரு புறம் காரைக்கால் இயற்கையை சிதைத்து மக்கள் வாழ முடியாத சீரழிவை உண்டாகும் கார்ப்பரேட் களின் வணிகத்திற்கு புதுச்சேரி அரசு துணை போகும் அவலம்.
காரைக்கால் தப்பி பிழைக்க தமிழ் நாட்டுடன் இணைவதுதான் வழி என்றால் அந்த திசையை நோக்கி மக்கள் நகரும் காலம் விரைவில் வந்து விடும். இதற்கு புதுச்சேரி அரசே முழு பொறுப்பாகும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


S.செய்யது தாஜுல் உசேன்
மாவட்ட செய்தியாளர்
காரைக்கால்
.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *