தர்மபுரி மாவட்டம் அரூர் வட்டம் செல்லம்பட்டி ஊராட்சி காவப்பட்டி பெரிய ஏரியில் தமிழ்நாடு அரசு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம், எக்ஸ்னோரா, கிரீன் நீடா, என்எஸ்டிஓ, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, ஆதி பவுண்டேஷன் தருமபுரி ஆகியோர் இணைந்து தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பனை விதை நடும் நெடும் பணி தேசிய நாட்டு நலப்பணித் திட்ட நாளன்று தொடங்கியது.

இந்நிகழ்வில் அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு செம்மலை தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், முதல்வர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், தன்னார்வலர் அமைப்புகள், பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சுமார் 6000 பனை விதைகளை நடவு செய்தனர்.
பனைமரம் தமிழர்களின் அடையாளம். பனையின் வேர் முதல் நுனி வரை பயன் தருகிறது. எனவே இதற்கு ‘கற்பகதரு’ என்று பெயர்.பனை மரத்தில் ஏராளமான நன்மைகளுண்டு குறிப்பாக பனை நிலத்தடி நீரை சேகரித்து அடுத்த தலைமுறைக்கு அளிக்கும். பனை ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டது.இத்தகைய சிறப்புகளை கொண்ட பனை விதைகளை இளம் தலைமுறையினரைக் கொண்டு நடவு செய்யப்பட்டது.
இந்நிகழ்வை மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோபிநாத், பாப்பிரெட்டிபட்டி அரசு கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் அருண் நேரு, தருமபுரி ஆதி பவுண்டேஷன் மற்றும் அரூர் ரோட்டரி கிளப் இணைந்து ஒருங்கிணைப்பு செய்தனர்.