கோயம்புத்தூர்,
சிபிஎஸ்இ சார்பில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான தேசிய அளவிலான வில்வித்தைப் போட்டியில், கோயம்புத்தூர் யுவபாரதி பப்ளிக் பள்ளி மாணவிகள் சிறப்பான சாதனைகளைப் படைத்து பள்ளிக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
ஹரியானா மாநிலம் பானிபட்டில் செப்டம்பர் 21 முதல் 27ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில், நாடு முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 19 வயதுக்குட்பட்ட இந்தியன் ரவுண்ட் பெண்கள் அணிப் பிரிவில், யுவபாரதி பப்ளிக் பள்ளி மாணவிகள் பிரகல்யா முத்துக்குமார், அஸ்விகா முத்துக்குமார் மைதிலி ராஜேஷ் ஆகியோர் இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு தங்கப் பதக்கம் வென்றனர். தங்களது துல்லியமான இலக்குநோக்கு, சிறப்பான திறமை மற்றும் ஒருங்கிணைந்த அணிச் செயல்பாட்டின் மூலம் அவர்கள் இந்த வெற்றியைப் பெற்றனர்.
மேலும், மைதிலி ராஜேஷ் தனிநபர் எலிமினேஷன் சுற்றில் வெண்கலப் பதக்கம் வென்று, தேசிய அளவில் தனது திறமையை வெளிப்படுத்தினார்.
தொடர்ந்து, 14 வயதுக்குட்பட்ட ரிகர்வ் வில் பெண்கள் அணிப் பிரிவிலும் யுவபாரதி பள்ளி மாணவிகள் சாதனை படைத்தனர். பிரகதி ஏகலைவன், ரீத்திகா ரகுநாத்மற்றும் அஞ்சனா ஸ்ரீ கோவிந்தராஜ் ஆகியோர் இணைந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
மாணவிகளின் இந்தச் சிறப்பான வெற்றிக்குப் பின்னால், அவர்களுக்கு முறையான பயிற்சியும் வழிகாட்டுதலும் வழங்கிய பயிற்சியாளர் திரு. கிஷோர் குமார் ஆர். அவர்களின் அர்ப்பணிப்பும் முக்கியப் பங்கு வகித்தது.தேசிய அளவிலான போட்டியில் பதக்கங்களை வென்ற யுவபாரதி பள்ளி மாணவிகளின் சாதனை, பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யுவபாரதி பள்ளி மாணவிகளின் இந்த வெற்றி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.