ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர்.தி.சாருஸ்ரீ நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில், ஜூலை-2023 மாத இயல்பான மழையளவு 37.09 மி.மீ. ஆகும்.
நடப்பாண்டில் ஜூலை மாதத்தில் 72.74 மி.மீ மழை பெறப்பட்டது. 20.07.2023 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 71.6 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 107 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 10,003 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
2023-24-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,914 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,808 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,742 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,464 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதில் குறுவை பருவத்தில் 11,603 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 18,918 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 5,943 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 36,464 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
2023-2024ஆம் ஆண்டில் உளுந்து 2,500 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில், காரீப் பருவத்தில் 615 ஹெக்டேரில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டில் நிலக்கடலை 4,480 ஹெக்டேரிலும், எள் 2,530 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் 39 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 84 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும், கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதில் 3 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதித் திட்டமானது 2018-ம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் முதலில் சிறு, குறு விவசாயிகளுக்கு மட்டும் என்று துவங்கி தற்போது அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் சாகுபடிக்கு தேவையான வேளாண் இடுபொருட்களை கொள்முதல் செய்வதற்கான உதவித் தொகையாக விவசாய குடும்பங்களுக்கு நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000-ம் வீதம் ஆண்டுக்கு ரூ.அறாயிரம் என மூன்று தவணைகளில் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடி மாற்றம் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் இதுவரை 13 தவணைகள் பணம் வரவு வைக்கப்பட்டுள்ளது. அடுத்த 14-வது தவணைத் தொகை வரும் மாதத்தில் விடுவிக்கப்படவுள்ளது. எனவே, அடுத்த தவணை பி.எம் கிஷான் உதவித் தொகை பெற நமுலுஊ-யை பதிவேற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 14-வது தவணை மற்றும் அதனை தொடர்ந்து வரும் தவணை வழங்கப்படமாட்டாது.
எனவே, இந்த திட்டத்தின்படி, பதிவு செய்து பயன்பெற தகுதியான பயனாளிகள் அனைவரும் பெயர் மற்றும் ஆதார் விபரங்களை மத்திய அரசின் பி.எம் கிஷான் இணைய வாயிலாக விவசாயிகள் நேரடியாக ஆதார் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் அல்லது பி.எம் கிஷான் திட்ட பயனாளிகள் அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு நேரிடையாக ஆதார் விபரங்களை எடுத்துச் சென்று கைரேகை வைத்து பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவேற்றம் செய்து கொண்டு பயன்பெறவேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணை கடந்த 12.06.2023 அன்று திறக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில், 61,588 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடப்பாண்டில் டெல்டா மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.75.95 கோடி மதிப்பில் குறுவை தொகுப்பு திட்டத்தினை முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 100 சதவீத மானியத்தில் இரசாயண உரங்கள் ஒரு ஏக்கருக்கு யூரியா 45 கிலோ, டிஏபி 50 கிலோ மற்றும் பெட்டாஷ் 25 கிலோ, ஒரு ஏக்கருக்கு .2466.50 மதிப்பில் ஒரு விவசாயிக்கு ஒரு ஹெக்டர் (இரண்டரை ஏக்கருக்கு) வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி ஒரு ஹெக்டேர் (இரண்டரை ஏக்கருக்கு) மட்டுமே உரங்களை இலவசமாக பெற இயலும்.
மேலும், குறுவை சாகுபடிக்கு தேவையான விதைகள் 50 சதவீத மானியத்தில் (கிலோ ரூ.17.50 வீதம்) ஒரு ஏக்கருக்கு 20 கிலோ வீதம் நெல் விதை வழங்கப்படவுள்ளது. மேலும், காவேரி டெல்டா மாவட்டத்தில் மண்வளத்தை பெருக்கவும் , மகசூலை அதிகரித்திடவும் 50 சதவீத. மானியத்தில் பசுந்தாள் உரவிதைகள் வழங்கப்படவுள்ளது.
குறுவை பருவத்தில், பயிர் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் குறுவை பருவத்தில் நெல் அல்லாமல் மாற்றுப்பயிர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்களை கொண்ட பல்வகை சாகுபடி பயிர் தொகுப்புகள் வழங்கப்படவுள்ளன.
சிறுதானியத்தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் 4 கிலோ விதையும், மண்ணில் இடும் நுண்ணுயிரி 50 சதவீத மானியத்தில் 1 கிலோவும், உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் அசோஸ்பைரில்லம் 500 மில்லியும், பாஸ்போபாக்டீரியா 500 மில்லியும், திரவ இயற்கை உரங்கள் மற்றும் அதன் தெளிப்புச் செலவினம் 750 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு ஏக்கருக்கு 2234 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன. பயறுவகை தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் 8 கிலோ விதையும், மண்ணில் இடும் நுண்ணுயிரி 50 சதவீத மானியத்தில் 1 கிலோவும், திரவ உயிர் உரங்கள் 50 சதவீத மானியத்தில் ரைசோபியம் 500 மில்லியும், பாஸ்போபாக்டீரியா 500 மில்லியும், திரவ இயற்கை உரங்கள் மற்றும் அதன் தெளிப்புச் செலவினம் 1500 ரூபாயும் ஆக மொத்தம் ஒரு ஏக்கருக்கு .3716 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், எண்ணெய் வித்துக்கள் தொகுப்பில் ஏக்கர் ஒன்றுக்கு 50 சதவீத மானியத்தில் ஒரு ஏக்கருக்கு 80 கிலோ விதை 10,840 மதிப்பில் இடுபொருட்கள் வழங்கப்படவுள்ளன.
குறுவை பருவத்தில் குறுவை நெல் சாகுபடி செய்யாத விவசாயிகளுக்கு மட்டுமே பயிர் பல்வகைப்படுத்துதல் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம். மேலும், வேளாண்மை பொறியியல் துறை மூலம் சிறு, குறு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண் சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் மானியத்துடன் கூடுதலாக 20 சதவீத மானியம் மாநில நிதியிலிருந்து வழங்கப்படும். இதர விவசாயிகளுக்கு 40 சதவீத மானியத்திலும், விசை களை எடுக்கும் கருவி, பவர் டில்லர் கருவிகள் வழங்கப்படவுள்ளன.
திட்டத்தின் கீழ் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்து பயனடைய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் கூடுதல் விபரங்களுக்கு உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயனடையுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித்தார்.
கூட்டத்தில், மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியர் செல்வி.கீர்த்தனா மணி, வேளாண்மைதுறை இணை இயக்குநர் (பொறுப்பு) லட்சுமி காந்தன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் சித்ரா, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் செயற்பொறியாளர் (வெண்ணாறு வடிநிலக்கோட்டம்) ராஜேந்திரன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஏழுமலை உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்