தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்று. சிவன் வேறு விஷ்ணு வேறு என்று பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமாள் கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சியை ஆடித்தவசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
ஆடித்தவசு திருவிழா தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். விழா நாட்களில் சுவாமி அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம்.
மேலும் திருக்கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஆடித்தவசு திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை (21.7.2023) காலை 6.20 மணி கோமதி அம்மன் சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரணைகள் நடைபெற்றது.
கொடியேற்று விழாவில் தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜா எம்எல்ஏ, முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி சரவணன், ஆணையாளர் சபாநாயகம், டாக்டர் சுப்பாராஜ், தொழிலதிபர்கள் கனகவேல், ராமகிருஷ்ணன், சங்கர சுப்பிரமணியன், சங்கரன், கண்ணன், குமரன், தலைமையாசிரியர் பழனி செல்வம், சுந்தர் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் 9 திருநாளான வருகிற 29ஆம் தேதி சனிக்கிழமை காலை நடைபெறுகிறது. சிகர நிகழ்ச்சியான ஆடித்தவசு திருவிழா 11ம் திருநாளான ஜூலை 31 ஆம் தேதி மாலை நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகளை திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினி, தூத்துக்குடி இணை ஆணையர் அன்புமணி, சங்கரநாராயணசாமி கோவில் துணை ஆணையர் ஜான்சிராணி மற்றும் மண்டகப் படித்தாரர்கள் செய்து வருகின்றனர்.