அபிராமி கல்வி நிறுவனத்தின் 11-வது பட்டமளிப்பு விழா ஈச்சனாரியில் உள்ள பிஒய் மஹாலில் நடைபெற்றது.
இவ்விழாவில் செவிலியர், மருந்தாளுனர் மற்றும் துணை மருத்துவ அறிவியல் மற்றும் பிசியோதெரபி, பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டமளிக்கப்பட்டது.
வுpழாவில் இயக்குனர் டாக்டர். குந்தவிதேவி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இயக்குனர் டாக்டர். உமாதேவி, வரவேற்புரை வழங்கினார். டாக்டர். எ.அர்வின்பாபு, டீன், அவர்கள் ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் வளர்ச்சி, முக்கிய நிகழ்வுகள் மற்றும் சாதனைகள் பற்றி எடுத்துரைத்தார்.
ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனத்தின் தலைவர் டாக்டர். பி.பெரியசாமி, தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் மற்றும் கௌரவ விருந்தினராக விஜய் டிவி “நீயா நானா” புகழ் திரு. கோபிநாத் சந்திரன் அவர்களும் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்புரையாற்றினார்கள்.
விழாவில் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் அவர்கள் பேசுகையில், மாணவர்களான உங்களை விட உங்கள் பெற்றோர்களின் கனவு நிறைவடைய போகிறது. விவசாய பின்னணியில் இருந்தும் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் இத்தனை பேர் பட்டம் பெறுவது தான் உண்மையான புரட்சி. தமிழ் பேச வேண்டும். பேசுவதில் தவறொன்றும் கிடையாது. அந்த தாழ்வு மனப்பான்மை கூடாது.
ஏழு செம்மொழிகளில் ஒன்று நம்முடைய தமிழ் மொழி என்பதை மறக்க கூடாது. பட்டமளிப்பு விழாவில் தான் மாணவ மாணவியர்கள் கனவு, பெற்றோர்களுடைய கனவு, ஆசிரியர்கள் கனவு அத்தனையும் நினைவாகிறது.
இந்த பட்டமளிப்பு விழா ஏற்பாடு செய்ததன் நோக்கம் என்னவென்றால் உங்களுக்கு மனதில் ஒரு கனவை விதைக்கவும், அதனை நோக்கி நீங்கள் பயணிக்க உங்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தவும் தான். இன்றைய இந்தியா உலகின் ஐந்து பெரிய பொருளாதாரங்களில் ஒன்று. கொரோனாவிற்கு பிறகு சகஜ நிலைக்கு மட்டுமின்றி அதனையும் கடந்து மேலே உயர்ந்த நாடு நம் இந்தியா தான். நீங்கள் எதை பற்றி வேண்டுமானாலும் கனவு காண இந்த விழா உறுதுணையாக இருக்கும். மனிதா நீ மகத்தானவன். உனக்கு நிகராக இன்னொன்று கிடையாது.
உன் மீது நீ நம்பிக்கை வை.. முயன்றால் முடியாதது எதுவும் கிடையாது. என்று சுவாமி விவேகானந்தர் கூறியது போல தாழ்வு மனப்பான்மையின்றி முயற்சி செய்ய வேண்டும்.” என்று அவர் பேசினார். என்று கூறினார்.
கௌரவ விருந்தினராக கோபிநாத் அவர்கள் தனது உரையில் கூறும்போது :- எனது பட்டப்படிப்பு சான்றிதழை என்னால் வாங்க முடியவில்லை. வாழ்க்கையில் எல்லோரும் நல்லவர்கள் என்று நினைக்க வேண்டும், எல்லோரும் கெட்டவர்கள் என்று நினைத்தால் ஒரு காலத்தில் அப்படியே நீங்கள் தனிமையை உணர்வீர்கள். அனைவருடனும் ஒன்றாக இணைந்து வாழப் பழகிக் கொள்ளுங்கள்.
இந்த உலகில் இருப்பது பண திருட்டு அல்ல, நேர திருட்டு தான். ஒரு நிறுவனம் உங்களின் நேரத்தை எவ்வளவு எடுத்துக்கொள்கின்றதோ அந்த அளவுக்கு அந்த நிறுவனம் வளர்கிறது என்று அர்த்தம். நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவிற்கும் அந்த நிறுவனத்திற்கு காசு வந்து கொண்டிருக்கிறது. மற்றவர்களைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டியது இல்லை. மற்றவர்களை நம்மைப் பற்றி கவலைப்படுவதில்லை.
நமக்குத் தெரிந்த விஷயங்களை நாம் அனைவரிடமும் விவாதிக்க வேண்டும். ஒருவரிடமே விவாதிப்பது நல்லதல்ல. முகத்திற்கு நேராக யார் ஒருவர் உண்மையை பேசுகிறார்களோ அவர்கள் 1000 நண்பர்களுக்கு சமம்.
சோசியல் மீடியாவில் பார்க்கும் மற்றவர்களின் வாழ்க்கை தான் வாழ்க்கை என்று நினைக்க வேண்டாம். நமது வாழ்க்கை நமது கையில். வாழ்க்கையில் நல்ல வாழ்க்கை, சுமாரான வாழ்க்கை என்று ஒன்றும் இல்லை. நீங்கள் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் உங்கள் வாழ்க்கை உள்ளது. என்று கூறினார்.
விழாவில் தேர்ச்சி பெற்ற சுமார் 200 மாணவ, மாணவியர்களுக்கு இளங்கலை பட்டம் வழங்கப்பட்டது. தேர்வில் முதலிடம் பெற்ற ஜோஸ்னா, ஃபாத்திமா சானா, அனஸ்வர பிரகாசன், ஃபாஸ்மா, மிதுனா, எழிழரசி, ஸ்ரீமோல் ஆகிய மாணவர்களுக்கு கல்லூரி வாரியாக பரிசுகள் வழங்கப்பட்டது. இயக்குனர் டாக்டர். சு.செந்தில்குமார், பட்டமளிப்பு பிரமாணத்தை வழங்கினார்.
பட்டம் பெற்ற மாணவர்கள் தங்களது கல்லூரி படிப்பு கால அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். இயக்குனர் டாக்டர். சுச்சரிதா, நன்றியுரை வழங்கினார். அதை தொடர்ந்து தேசிய கீதத்துடன் இந்நிகழ்ச்சி முடிவுற்றது.
இந்நிகழ்ச்சியில் இயக்குனர் டாக்டர். பி. பாலமுருகன், முதல்வர்கள் டாக்டர் ரேனுகா, டாக்டர். செந்தில்குமார், டாக்டர். ஜெயபாரதி, டாக்டர். நரேஷ்பாபு, ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.