அழகர்கோவில், கள்ளழகர் கோவில் ஆடி தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அழகர்கோவில், ஸ்ரீ ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் மிக முக்கியமானது. ஆடிப்பெருந்திருவிழாவாகும். இந்த விழா கடந்த 24 ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதில் அன்னம், சிம்மம், அனுமார், உள்ளிட்ட பல வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்ட திருவிழா நேற்று காலை 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேருக்கு, பெருமாள், தேவியர்களுடன், எழுந்தருளினார்.
தொடர்ந்து காலை 8.10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நடைபெற்றது. இதில் சுமார் 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்கள் பலர் சந்தன குடம் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பொங்கல் வைத்து, கிடாய் வெட்டி பக்தர்கள் அன்னதானம் வழங்கினர்.
கூட்ட நெரிசலை தவிர்க்க கோவில் கோட்டைவாசல் முன்பாக சுமார் 2 கிலோ மீட்டர் முன்னே வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு பக்தர்கள் மட்டும் நடந்து செல்ல அனுமதிக்கபட்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்.பி சிவப்ரசாத் தலைமையில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகம் என்பதால் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதைதொடர்ந்து நாளை புஷ்ப சப்பரம், 3ந் தேதி ஆடி 18ம் பெருக்கு நாளில் உற்சவ சாந்தி நடைபெறும். இத்துடன் இந்த திருவிழா நிறைவு பெறுகிறது. பக்தர்கள் அழகர்மலை நூபுர கங்கை ராக்காயி அம்மன், ஆறாவது படைவீடு சோலைமலை முருகன், கள்ளழகர் பெருமாள், மற்றும் பதினெட்டாம் படி கருப்பணசுவாமி, ஆகிய கோவில்களில் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். ஆடி திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி, மற்றும் உள்துறை அலுவலர்கள், திருக்கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.