எஸ். செல்வகுமார் செய்தியாளர்
மயிலாடுதுறை மாவட்டத்திற்கு விரைவில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழாவில் அமைச்சர் தகவல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 அரசு பள்ளிகளுக்கு 1120 மிதிவண்டிகள் மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தலைமை வகித்தார்.
சட்டபேரவை உறுப்பினர்கள் எம்.பன்னீர்செல்வம்(சீர்காழி),நிவேதா.எம்.முருகன்(பூம்புகார்),கோட்டாட்சியர் உ.அர்ச்சனா,ஒன்றியக்குழுத்தலைவர் ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யனாதன் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி பேசுகையில், தமிழக முதல்வர் பள்ளி கல்வித்துறைக்கு 40 ஆயிரத்து 299 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2022 }23 கல்வி ஆண்டில் 52 அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்விப் பயிலும் மொத்தம் 6536 மாணவ மாணவிகளுக்கு ரூ.3 கோடியே 14 லட்சத்து 81 ஆயிரத்து 100 மதிப்பில் மிதிவண்டிகள் வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாட்டில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி அமைக்க வேண்டுமென பூம்புகார், சீர்காழி சட்டபேரவை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதன் அடிப்படையில் விரைவில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மருத்துவக் கல்லூரி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதே போல் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தில் துறைமுகம் அமைக்க வேண்டும் என சட்டபேரவை உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.