நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில்ஓரி வில்வித்தையில் சிறந்து விளங்கி கொல்லிமலையை ஆண்ட மன்னராவார்.
இவர் தானத்தில் சிறந்து விளங்கியதால் கடையேழு வள்ளல்களில் ஒருவராக பொதுமக்களாலும், வரலாற்று அறிஞர்களால் போற்றப்படுகிறார்.
இவரது புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கொல்லிமலையில் வல்வில்ஓரி விழா தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது.
அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டும் கொல்லிமலை செம்மேடு வல்வில்ஓரி அரங்கில், வல்வில்ஓரி விழா மற்றும் சுற்றுலா விழாவும், கொல்லிமலை வாசலூர்பட்டி தாவரவியல் பூங்காவில் மலர்க்கண்காட்சி துவக்க விழா
02.08.2023 நடைபெற்றது. இவ்விழாவில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி , வருவாய் கோட்டாட்சியர் சரவணன் தலைமையில், வல்வில் ஓரி திருவுருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, மலர்க்கண்காட்சியினை துவக்கி வைத்தார்.
வல்வில் ஓரி விழாவில் தோட்டக்கலைத்துறையின் சார்பாக கொல்லிமலை தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி மற்றும் மருத்துவப் பயிர்கள் கண்காட்சி சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் கு.பொன்னுசாமி பார்வையிட்டார்.
மலர்கண்காட்சியில் குழந்தைகளை கவரும் வகையில் 40,000 வண்ண ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோட்டா பீம், 15,000 பல்வகை மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் படுக்கை மற்றும் மலர் அலங்காரம் ஆகியவை கண்ணாடி மாளிகையில் அமைக்கப்பட்டுள்ளது. 25,000 ரோஜா மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கங்காரு வடிவம் 20,000 பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட முயல் வடிவம், 15,000 பல வண்ண மலர்களால் அமைக்கப்பட்டிருந்த இதய வடிவில் ஆன அமைப்பு, ஆசிய ஹாக்கி சாம்பியன் அடையாளச் சின்னமான பொம்மன் மற்றும் கலைஞர் நூற்றாண்டு சின்னம் ஆகியவை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.
இம்மலர் கண்காட்சியில் ரோஜா, ஜெர்பரா, கார்னேசன் ஆந்தூரியம் ஜிப்சோபில்லம், சாமந்தி ஆர்கிட் லில்லியம் ஹெலிகோனியம் சொர்க்க பறவை கிளாடியோஸ் டெய்சி சம்பங்கி ஆகிய மலர்களால் இம்மலர் கண்காட்சி மிகவும் சிறப்பாக பொதுமக்கள் கண் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவ பயிர்கள் குறித்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில் மருத்துவ பெயரின் தாவரவியல் பெயர் பயன்படும் பகுதி மருத்துவ பயன்கள் குறித்து விளக்க குறிப்பு வைத்து மருத்துவ பயிர்கள் கண்காட்சி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பின்னர் வல்வில் ஓரி அரங்கில் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிப்பதற்காகவும், விளக்கமளிப்பதற்காகவும் 22 க்கும் மேற்பட்ட துறைகளை கொண்டு அமைக்கப்பட்ட கண்காட்சி; அரங்குகளை சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் திரு.கு.பொன்னுசாமி அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
பின்னர், வல்வில் ஓரி விழாவின் தொடக்க நாளாளில் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத் துறை மற்றும் பள்ளிகல்வித் துறைகளின் சார்பில் கொல்லிமலை வாழ் மக்களின் பராம்பரிய கலை நிகழ்ச்சி, மங்கள இசை, தெருக்கூத்து, கும்மியாட்டம், பரதநாட்டியம், நாட்டுப்புறப்பாடல், நாடகம், கோலாட்டம், வல்வில் ஓரி குறித்த சொற்பொழிவு, பரதம், தப்பாட்டம், ஆர்கெஸ்ட்ரா, கிராமிய நடனம், விழிப்புணர்வு நாடகம், சேர்வை நிகழ்ச்சி, புல்லாங்குழல் வாசித்தல், பாட்டு பாடுதல் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இவ்விழாவில் கொல்லிமலை ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் அ.மாதேஸ்வரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் எஸ்.பிரகாஷ், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் கி.கணேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் தே.ராம்குமார், சுற்றுலாத்துறை அலுவலர் அபராஜிதன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொ) மரு.நடராஜன், கொல்லிமலை வட்டாசியர் அப்பன்ராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், தனபால், அத்மா குழு தலைவர் செந்தில் முருகன், வாழவந்திநாடு ஊராட்சி மன்றத்தலைவர் சங்கீதா, அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள், பள்ளி மாணவ மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.