மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்

அரசு சான்று பெற்ற விதையினால் விவசாயிக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பு

மன்னார்குடியில் அரசு சான்று பெற்ற விதையினை வாங்கி விதைப்பு செய்து பல மாதங்கள் ஆகிய போதிலும் முளைப்பு திறன் இல்லாததால் விவசாயி ஒருவர் சுமார் ரூ.3 லட்சத்திற்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளாதால் மனஉளைச்சல் அடைந்த விவசாயி

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் ஒன்றான திருவாரூர் மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை பெருக்கும் நோக்கில் மாவட்ட வேளாண்துறை கட்டுப்பாட்டில் விவசாயிகளுக்கு அரசு சான்று பெற்ற விதைநெல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விதைநெல்லானது அரசு நிறுவனங்கள் மூலமாகவம், தனியார் கடைகள் வாயிலாகவும் மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கைலாசநாதர் கோவில் பகுதியை சேர்ந்த விவசாயி மணியன் என்பவருக்கு சொந்தமான 1 வேலி நிலம் மன்னார்குடியை அடுத்த நாகராஜபுரம் கிராமத்தில் இருந்து வருகிறது.

இவர் தனது 1 வேலி பரப்பளவிலான நிலத்தில் ஆழ்குழாய் பாசனத்தின் மூலம் கோடைப்பருவ குறுவை சாகுபடி பணியினை மேற்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் விதை மற்றும் உரம் விற்பனை செய்யும் கடையில் அரசு சான்று பெற்ற ஏ.எஸ்.டி 16 என்ற விதை நெல்லை விலைக்கு வாங்கி விதைப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

மேலும் இவர் தனது 1 வேலி நிலத்தில் விதைப்பு செய்த பயிரை காப்பாற்ற இதுவரை ரூ.3 லட்சத்திற்கு மேல் செலவு செய்த போதிலும் பயிர் மூளைப்பு திறன் இன்றி இருப்பதை கண்டு மனவேதனை அடைந்துள்ளார்.

மேலும் விதைநெல் வாங்கிய கடையில் நெற்பயிர்கள் வரவில்லை விதைநெல் முளைப்புதிறன் இல்லை என எடுத்துக்கூறி புலம்பிய விவசாயி மணியனுக்கு கடை உரிமையாளர் ஒருசில பூச்சி மருந்துகளை கொடுத்து வயலில் தெளிக்க சொல்லி அறிவுறுத்தினர்.

அத்தகைய பூச்சி மருந்தினையும் பல ஆயிரங்கள் செலவு செய்து விலைக்கு வாங்கி வயலில் தெளித்த விவசாயி மணியனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த விவசாயி மணியன் மன்னார்குடி வேளாண் விரிவாக்க அலுவலரை தொடர்புகொண்டு அரசு சான்றுபெற்ற விதையினை வாங்கி விதைப்பு பணிகளை மேற்கொண்டு 3 மாதங்கள் ஆகியும், பயிர்கள் வளர்ச்சியில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என முறையிட்டுள்ளார்.

மேலும் விவசாயி மணியனுக்கு அருகில் உள்ள நிலங்களில் கோடைபருவ குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்ட விவசாயிகள் அறுவடை செய்துவரும் நிலையில் இவரது வயலில் பயிர்கள் வளர்ச்சி இன்றியும் நெற்கதிர் இல்லாமல் பயிர்கள் முழுவதும் வைக்கோல் போல் பயிர்கள் தட்டையாகவும் இருப்பதை கண்டு வேதனை அடைந்தார்.

இது குறித்து விவசாயி மணியன், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளை சந்தித்து அரசு சான்று பெற்ற விதை நெல் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசு சான்றுபெற்ற விதைநெல் என கூறி விற்பனை செய்யும் தனியார் கடைகளில் கலப்படம் மேற்கொண்டு உள்ளதாகவும் இதுகுறித்து உரிய ஆய்வு செய்வதோடு, எனக்கு அரசு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும் அடுத்த கட்ட சாகுபடி பணிகளை மேற்கொள்ள அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிடில் தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயி மணியன் மனவேதனை தெரிவித்துள்ளார்.

ஆனால் இதுகுறித்து சம்மந்தப்பட்ட வேளாண்துறை அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் அரசு சான்றுபெற்ற விதைநெல் என போலியாக விதைநெல்லை விற்பனை செய்யும் தனியார் கடை உரிமையாளர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *