கோவையின் அடையாளமக திகழ்கிறது கோவை டவுன்ஹால் அருகே ராஜ வீதியில் உள்ள மணிக்கூண்டு. கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், தென்னக வனக்காப்பாளர் கல்லூரி மற்றும் ராஜவீதியில் உள்ள மணிக்கூண்டு ஆகிய மூன்றும் மிகவும் பழமை வாய்ந்தவை. கோவை ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதி சந்திப்பில் மணிக்கூண்டு அமைந்துள்ளது.
1855-ம் ஆண்டில் வாழ்ந்த ராவ் பகதூர் ஏ டி திருவேங்கடசாமி முதலியார் நினைவாக, 1923-ல் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஏடிடி என அழைக்கப்பட்ட இவரது பெயரில் கோவை நகரில், ‘ஏடிடி காலனி‘ என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆற்காடு தொப்பைய முதலியார் மகனான திருவேங்கடசாமி முதலியார், கோயம்புத்தூர் நகராட்சி தலைவராக பத்து ஆண்டுகளில் பதவி வகித்து சேவையாற்றி உள்ளார்.
திருவேங்கடசாமி முதலியாருக்கு மூன்று மகன்கள். ஏ.டி லட்சுமி நாராயணசாமி முதலியார், ஏ.டி தேவராஜ முதலியார் ஏ.டி. கிருஷ்ணசாமி முதலியார் ஆகியோரும் கோவை மாநகராட்சிக்கு சேவை செய்தனர். இந்த மூவரும் கோவை நகரில் தங்களது தந்தையின் நினைவாக ஏதாவது ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என விரும்பினர்.
எனவே, 1928 ம் ஆண்டு மணிக்கூண்டினை அவரது தந்தை நினைவாக கட்டினர். இந்த மணிக்கூண்டிற்கு கீழே ஒரு வாசிப்பு அறையையும் உருவாக்கினார்.
கைக்கடிகாரம் இல்லாத அந்த காலத்தில் பொதுமக்கள் நேரம் பார்க்க மணிக்கூண்டு மிகவும் பேருதவியாக இருந்தது. ஒவ்வொரு காலகட்டத்திலும் இந்த மணிக்கூண்டு புதுப்பிக்கப்பட்டு வந்தது. தற்போது புதுப்பிக்க வேண்டிய நேரம் வந்துள்ளது. கிரடாய் கோயம்புத்தூர் அமைப்பு, தொன்மையான இந்த மணிக்கூண்டினை உள்ளது உள்ளவாறு புதுப்பித்து, இந்த வரலாற்று சிறப்புமிக்க அடையாளத்தை பொலிவூட்ட முன்வந்தது.
கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் துணைத் தலைவர் அபிஷேக் .டி கூறுகையில், “கோவை மாநகராட்சியின் ஆணையர் வேண்டுகோளின் படி, நிறுவனங்களின் சமுதாய பொறுப்பு திட்டத்தின் கீழ் இந்த பணியை நிறைவேற்ற கிரெடாய் அமைப்பு முன்வந்தது. இந்த கட்டடத்தின் உண்மையாக தொன்மை மாறாமல் அப்படியே புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு பழமையும் பொலிவும் பெரும் வகையில் ஜாக்குவார் விளக்குகள் கொண்டு ஒளியூட்டப்பட்டுள்ளன,” என்றார்.
கோயம்புத்தூர் கிரடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ கூறுகையில், “கோவை நகரின் முக்கிய அடையாளமாக திகழும் மணிக்கூண்டினை புதுப்பிக்கப்படும் இந்தத் திட்டத்தில் கிரடாய் அமைப்பிற்கு கிடைத்த வாய்ப்பினை பெருமையாக கருதுகிறோம். இந்த மணிக்கூண்டு பராமரிப்பு பணியனையும் தொடருவோம், என்றார்.
புதுப்பிக்கப்பட்ட இந்த மணிக்கூண்டினை மாநில வீட்டு வசதி மற்றும் ஊரகத்துறை அமைச்சர் மாண்புமிகு முத்துசாமி அவர்கள் பொதுமக்களுக்கு அர்ப்பணித்தார். மேலும் விழாவில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகர காவல்துறை ஆணையார் வி. பாலகிருஷ்ணன், கோவை மாநகர மேயர் கல்பனா மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் மு. பிரதாப் உட்பட கிரடாய் கோயம்புத்தூர் அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.