எஸ். செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே முதலைமேடு திட்டு, கிராமத்தில் வீடுகள் ,தெருக்களில் கருப்புக்கொடி கட்டியும் கருப்பு கொடி ஏந்தியும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள மகேந்திரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவபாலன். கொள்ளிடம் ஒன்றிய குழு உறுப்பினரான இவரை கடந்த மாதம் இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கார் மோதியதில் சிவபாலன் கீழே விழுந்தார்.
அப்போது காரில் இருந்த அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வமணி மற்றும் காரை ஓட்டி வந்த பாலச்சந்திரன் ஆகிய இருவரும் சிவபாலனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றனர். அதனை தடுத்த சிவபாலன் செல்வமணி கையில் வைத்திருந்த அரிவாளை பிடுங்கி செல்வமணியை திருப்பி தாக்கியுள்ளார்.
இதில் செல்வமணியும்,சிவபாலனும் காயமடைந்து இருவரும் சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கார் மற்றும் டிரைவர் பாலச்சந்திரனை கைது செய்த நிலையில், ஒன்றியக் குழு உறுப்பினர் சிவபாலன் மீது செல்வமணி அளித்த புகாரின்படி கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடையே ஒன்றிய குழு உறுப்பினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் கொலை முயற்சி வழக்கு ரத்து செய்ய கோரியும் வழக்கில் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய கோரியும் முதலைமேடு திட்டு, மகேந்திரள்ளி ஆகிய கிராமங்களில் வீடுகள் மற்றும் தெருக்களில் கருப்புக்கொடி கட்டிய கிராமக்கள் கையில் கருப்புக்கொடிகளுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப் போது காவல்துறையை கண்டித்தும் உண்மையான குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யக்கோரியும் கண்ட முழக்கங்கள் எழுப்பினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.