தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.
மத்திய அரசை கண்டித்து 19-ம் தேதியில் காவிரி டெல்டாவில் ரயில் மறியல் போராட்டம்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு.
தஞ்சாவூரில் தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் மாநில நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைவர்
எல்.பழனியப்பன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு அமைப்பு செயலாளர் எஸ்.ஸ்ரீதர், மாநிலத் துணைச் செயலாளர் எம்.செந்தில்குமார், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம்- விஸ்வநாதன், ஒருங்கிணைப்பு குழு தலைவர் வேட்டங்குடி சீனிவாசன், திருவாரூர் மாவட்ட தலைவர் எம் சுப்பையன், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.வீரப்பன், செயலாளர்
எம் மணி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.
பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களும் பேசும்போது:-
மத்திய அரசு காவிரி பிரச்சனையில் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு விரோதமாகவும், கர்நாடகாவுக்கு ஆதரவான நிலையில் செயல்பட்டு வருகிறது. காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மத்திய அரசின் பிரதிநிதிகள் தமிழ்நாடு மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தியுள்ளனர். குறிப்பாக குருவை என்கிற பெயரில் காவிரி நீரை வீணடித்து விட்டார்கள். நெல்லுக்கு மாற்று சாகுபடி மேற்கொள்ள மறுக்கிறார்கள். தற்போதைய நிலையில் தென்மேற்கு பருவமழை முடிந்து விட்டது.
வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டிற்கு கைகொடுக்கும். ஆனால் கர்நாடகாவிற்கு இனி மழை பெய்வதற்கான வாய்ப்பு இல்லை. எனவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என எடுத்துரைத்தது. இதனையே உச்சநீதிமன்றத்தில் ஆணைய தலைவர் எழுத்துப்பூர்வமாக அறிக்கையாக கொடுத்திருக்கிறார். மோடி அரசு காவிரி பிரச்சினையில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவும், அரசியல் உள்நோக்கத்தோடு தமிழ்நாடு விவசாயிகளை அழிக்கும் நோக்கோடு செயல்படுவது வெளிப்பட்டுள்ளது.
ஆணையம் உத்தரவிட்டும் தமிழ்நாட்டிற்கு தண்ணீரை தர கர்நாடக மறுக்கிறபோது, ஆணைய முடிவை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கு தான்உள்ளது. ஆனால் மத்திய அரசு ஆணையத்தின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கிறது.
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என்று கர்நாடகா பாஜக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனால் தண்ணீரை விடுவிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் உபரி நீரையும் தடுத்து மேகதாது அணை கட்டுவதற்கு கர்நாடக முயற்சிக்கிறது. அதற்கு மறைமுகமாக மத்திய அரசு துணை போகிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 3.50 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்த குருவைப் பயிர்கள் கதிர் வரும் நிலையில் கருகத் தொடங்கியுள்ளது சுமார் 15 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி துவங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே உடனடியாக காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு நேரில் தலையிட்டு கர்நாடகாவில் உரிய தண்ணீரை பெற்று தமிழக விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். மத்திய அரசு காவிரி மேலாண்மை ஆணையத்தை முடக்க நினைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். தன்னாட்சி அதிகாரத்தோடு காவிரி மேலாண்மை ஆணையம் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
என வலியுறுத்தி வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி காவிரி டெல்டா மாவட்டங்களில் மாபெரும் ரயில் மறியல் போராட்டத்தை நடத்த உள்ளோம். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் ரயில் மறியல் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளனர்.
அனைத்து அரசியல் கட்சியினர், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள். விவசாயிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு பங்கேற்க வேண்டும். அக்டோபர் இரண்டாவது வாரத்தில் டெல்டாவில் முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
முன்னதாக தஞ்சாவூர் வடக்கு மாவட்ட தலைவர் காவலூர் செந்தில்குமார் வரவேற்றார். தஞ்சை மாநகர செயலாளர் அறிவு நன்றி கூறினார்.