(வி .தங்கப்பிரகாசம் செய்தியாளர் புதுச்சேரி)

புதுச்சேரி தென்னிந்தியாவின் மருத்துவ தலைமையிடமாக மாறி வருகிறது ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேச்சு

புதுச்சேரி

புதுச்சேரி அரசு
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் “சேவா பக்வாடா“, “ஆயுஸ்மான் பவ“ மற்றும் “சந்திரயான்“ திட்ட தொடக்க விழாநேற்று நடைபெற்றது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு காணொளி வாயிலாக “சேவா பக்குவாடா“ மற்றும் “ஆயுஷ்மான் பவ“ திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணி அமைச்சர் லட்சுமி நாராயணன், வேளாண் அமைச்சர் ஜெயக்குமார், மாநிலங்களவை உறுப்பினர் செல்வகணபதி, சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறைச் செயலர் முத்தம்மா, இயக்குனர் டாக்டர் ஸ்ரீராமுலு ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா காணொளி மூலமாக விழாவில் பங்கேற்றார்.

சந்திரயான் திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
• ஆயுஷ்மான் திட்டத்தை ‘நீடூழி வாழ்க’ என்று அழைக்கலாம். புதுச்சேரி சுகாதாரத்துறை மிகச் சிறப்பாக மக்களுக்கு உதவி வருகிறது. புதுச்சேரியில் உள்ள மக்கள் நீடூழி வாழ்வார்கள். அந்த அளவிற்கு சுகாதாரத்துறை மக்கள் மீது அக்கறை எடுத்துக் கொள்கிறது.

• ‘ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டு திட்டத்திற்காக பாரதப் பிரதமருக்கு நன்றி கூறவேண்டும். இதன் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் பலனடைந்து வருகிறார்கள். புதுச்சேரியில் அதன் மூலம் மக்கள் பெரிதாக பலனடையவில்லை என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

• மருத்துவத்துறை புதுச்சேரியில் எவ்வாறு மேம்படுத்தப்பட வேண்டும் என்று தொடர்ந்து கூட்டம் நடத்தி விவாதிக்கப்பட்டு வருகிறது. காசநோய் இல்லாத புதுச்சேரியை உருவாக்குவதற்காக, ‘டிபி முக் பாரத்’ திட்டத்தின் மூலம் வீடு வீடாக சென்று நோய்த்தொற்று அறிகுறிகள் இருக்கும் மக்களுக்கு ‘எக்ஸ்-ரே’ எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக ரூ. 84 லட்சம் ரூபாய் மதிப்பில் ‘எக்ஸ்-ரே’கருவி மக்களுக்காக பயன்பாட்டில் உள்ளது. இந்தியாவிலேயே மற்ற மாநிலங்களை விட புதுச்சேரியில் தான் இந்த திட்டம் நடைமுறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

• ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் 54,597 பேர் பயனடைந்து இருக்கிறார்கள். இதற்காக ரூ. 41 கோடியே 27 லட்சம் செலவிடப்பட்டு இருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கூட தமிழகத்திலிருந்து 30% நோயாளிகள் புதுச்சேரிக்கு வந்து இங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்கள். அந்த அளவிற்கு புதுச்சேரியில் மருத்துவ வசதிகள் மக்களுக்கு பயன்பட்டு வருகிறது.

• சமீபத்தில், பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்ற ஒரு ஆட்டோ விபத்துக்குள்ளானபோது அவர்கள் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கவலை கொண்ட பெற்றோர்கள் வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முற்படும்போது, விபத்துக்குள்ளான குழந்தைகளை இந்த நேரத்தில் வெளி மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்வதில் இருக்கக்கூடிய சிக்கல்களை விவரித்து, இந்த மருத்துவமனையில் இருக்கக்கூடிய திறமைவாய்ந்த நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர்களையும், சிறப்பு மருத்துவர்களையும், அறுவை சிகிச்சை இடத்தையும் பற்றி எடுத்துச்சொல்லி அந்த குழந்தைகளுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.

• மருத்துவர்கள் அளித்த சிறப்பான சிகிச்சையினால் குழந்தைகள் விரைவாக குணமடைந்தார்கள். இதற்கு அரசு மருத்துவர்களை பாராட்ட வேண்டும். எனவே, அவநம்பிக்கையை மக்களிடம் பரப்ப வேண்டாம். மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் கொடுக்கப்படுகிறது என்று ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூறினார். கிட்டத்தட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கும் சென்று பார்வையிட்டு சோதனை செய்தேன்.

• தலைமைச் செயலாளரோடு 108 ஆம்புலன்ஸ் (அவசர ஊர்தி) எப்படி சிறப்பாக மக்களுக்கு உதவும் வகையில் பயன்படுத்த முடியும் என்று விவாதிக்கப்பட்டு அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுபோன்ற காரணிகளால் தென்னிந்தியாவில் புதுச்சேரி மாநிலம் மருத்துவ தலைமையிடமாக மாறி வருகிறது.

• நவீன கருவியான ‘கேத் லேப்’ புதுச்சேரியில் இருக்கிறது. வெளியூர் சென்று அதை உபயோக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவிகள் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் புதுச்சேரியில் இருந்து 886 பேர் வேறு மாநிலங்களுக்கு சென்று பலனடைந்து உள்ளார்கள். அதற்காக ரூ. 19 லட்சம் செலவிடப்பட்டிருக்கிறது. அதைப்போல, 3128 பேர் வேறு மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வந்து சிகிச்சை பெற்று இருக்கிறார்கள். இதற்கு ரூ. 6 கோடி ரூபாய் ஆயுஷ்மான் பாரத் மூலம் செலவிடப்பட்டிருக்கிறது.

• “ஆயுஷ்மான் பவ“ திட்டத்தின் சிறப்பு என்னவென்றால் நீங்கள் இந்த திட்டத்தின் மூலம் எந்த மாநிலத்திற்கும் சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். அவர்களின் மருத்துவ செலவு கொடுக்கப்படும். தெலுங்கானாவில் ‘ஆரோக்கிய ஸ்ரீ’ திட்டம் மக்களின் மருத்துவத்திற்கு பயன்பட்டு வந்து கொண்டிருந்தது. அதனால் அவர்கள் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை பயன்படுத்த மறுத்த போது, இதிலிருக்கும் சிறப்பம்சங்களை எடுத்து சொன்னதால் அவர்கள் இதை பின்பற்ற ஆரம்பித்தார்கள். எனவே, ஆயுஷ்மான் பாரத் மூலம் ஒரு நபர் எங்கு சென்றாலும் மருத்துவச்சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியும். அதனால், புதுச்சேரி சுகாதாரத்துறையில் முன்னேறி வருகிறது.

• புதுச்சேரியில், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு மருத்துவச் சேர்க்கையில் வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் கிட்டத்தட்ட 50 பேர் மருத்துவராக போகிறார்கள் என்பது புதுச்சேரியின் சாதனை. பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தில் முன்பு 17,000 பேர் பயனடைந்து வந்தார்கள். இப்பொழுது அது 76,000 பேர் பயனடைய இருக்கிறார்கள்.

• பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு புதுச்சேரியில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதியாக கொடுக்கப்படுகிறது. பாரதப் பிரதமர் கேஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைத்திருக்கிறார். புதுச்சேரியில் ரூ. 300 குறைக்கப்பட்டிருக்கிறது.

புதுச்சேரி பல்வேறு வகைகளில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. குடியரசு தலைவர், பாரதப் பிரதமர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் இணைந்து தொடங்கிய ‘நீடூழி வாழ்க’ திட்டமானது புதுச்சேரியில் மிகச் சிறப்பாக மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

• அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு ஒரு வேண்டுகோள். மருத்துவர்கள் சரியான நேரத்திற்கு வந்து பணிசெய்ய வேண்டும். அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து கொண்டு அதே நேரத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி அதற்கு அதிக நேரம் செலவிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் “உறுப்பு தான“ உறுதிமொழியை துணைநிலை ஆளுநர் வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *