கோவையில், தொடர்ந்து மூன்றாவது நாளாக சவர்மா விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்ததில், 155 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு,கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது…
நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் இருந்து சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இதே போல சவர்மாவை சாப்பிட்ட பலரும்,உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து,தமிழகத்தில் உணவகங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். கோவையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படியும்,மாநாகராட்சி ஆணையர் அறிவுறுத்தலின் படியும்,,உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் உணவகங களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது…
இதன் தொடர்ச்சியாக,மூன் றாவது நாளாக, கோவை மாநகரில் கோவைபுதூர், கணபதி, சரவணம்பட்டி, இராமநாதபுரம், வடவள்ளி, அவினாசி ரோடு, பீளமேடு, சூலூர், சிங்காநல்லூர் மற்றும் பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்டு 9 குழுக்கள் அமைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில்,சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் கடைகளை ஆய்வு செய்யப்பட்டதில் 63 கடைகளில் 155 கிலோ பழைய இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது… மேலும் 20 கிலோ கெட்டுப்போன மசாலா பேஸ்ட் மற்றும் 1 லிட்டர் மையோனைஸ் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
ஆய்வின் போது குறைகள் கண்டறியப்பட்ட 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 7 கடைகளுக்கு அபராதமாக ரூ.14,000/- விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற திடீர் களஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் அனைத்து உணவு வணிகங்களும் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும் உணவு பாதுகாப்பு துறை அலுவலர் தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற விதிமுறைகளை பின்பற்றாத உணவு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறை சார்ந்த சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்…
மேலும் சவர்மா தயாரிப்பில் ஏதேனும் சுகாதாரக் குறைபாடுகளை கண்டறிய நேரிட்டால் 9444042322 என்ற உணவுப் பாதுகாப்பு துறையின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடதக்கது