தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்.
ஜோ.லியோ.

இந்தியாவின் வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும் சோழர் அருங்காட்சியகம் அமைக்கும் பணி விரைவில் தொடக்கம்.

அமைச்சர். தங்கம் தென்னரசு பேச்சு.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் பேரவை கூடத்தில் நடைபெற்ற அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்கிற முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு மாநிலக் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்த அமைச்சர் பேசியது:

இந்தியாவிலுள்ள வேறு எந்த மாநிலத்திலும் மேற்கொள்ளப்படாத தொல்லியல் ஆய்வுகள் தமிழகத்தில்தான் அதிக அளவில் செய்யப்படுகிறது. இதற்கான நிதியுதவியை முதல்வர் அளித்து வருகிறார். இந்தியாவின் வரலாறு கங்கைச் சமவெளியில் எழுதுவது அல்ல. அது காவிரிக்கரையில் இருந்து எழுதக்கூடிய வரலாறாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை, வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழ்நாட்டினுடைய வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

நாம் என்னவாக இருந்தோம் என்பதை அறிந்து கொண்டால்தான், எதிர்காலத்தில் நாம் என்னவாக வர வேண்டும் என்பதை தீர்மானிக்க இயலும். நம்முடைய தமிழர் நாகரிகம், நம் சமுதாயம் எப்படி இருந்தது, தமிழனுடைய நாகரிகம் எப்படி எல்லாம் மறைக்கப்பட்டது. என்பதை எல்லாம் அறிந்து கொண்டால்தான், எதிர்காலங்களில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும் என்றார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தது:

தொல்லியல் துறைக்குத் தமிழக முதல்வர் மிகுந்த அக்கறையோடு ஆதரவு தருகிறார். இதனால் பல இடங்களில் ஆய்வு நடைபெற்று வருகிறது.

குறிப்பாக, கீழடி அருங்காட்சியகம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, பொருநையில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டபடி, தஞ்சாவூரில் சோழர்களின் பெருமையை விளக்கும் விதமாக மாபெரும் சோழர் அருங்காட்சியகம் அமைப்பதற்கான இடமும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனவே மிக விரைவிலேயே அருங்காட்சியம் அமைப்பதற்கான பணி தொடங்கப்படவுள்ளது. இதே போல கங்கைகொண்ட சோழபுரத்திலும் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று கூறினார்.

இக்கருத்தரங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் துரை. சந்திரசேகரன், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *