மன்னார்குடி செய்தியாளர் தருண்சுரேஷ்
“விதை நெல் முளைப்பு இல்லாமல் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் கவலை”

அரசு சான்று பெற்ற விதை நெல்லின் போலியான விதை நெல் கலப்படத்தால் நீடாமங்கலம் அருகே 50க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விதை நிறுவனம் இழப்பீடு வழங்கவில்லை எனில் விவசாயிகளை ஒன்று திரட்டி தீவிரமாக போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு விவசாய சங்கம் தெரித்துள்ளது.

காவிரி டெல்டா பாசன மாவட்டங்களின் கடைமடை பாசன மாவட்டமான திருவாரூர் மாவட்டம் முற்றிலும் விவசாயத்தை சார்ந்துள்ள மாவட்டம். நடப்பாண்டில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வேளாண்துறை இலக்கு நிர்ணயித்து அதற்கு ஏற்ப அரசின் சான்று பெற்ற விதை நெல் அரசு மூலமாகவும், அரசின் அனுமதியுடன் தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் விற்பனை செய்யப்பட்டது

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்னும் 5 அல்லது 6 வாரங்களில் அறுவடை பணிகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் நீடாமங்கலம் வட்டம் ராஜப்பையன் சாவடி கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் விவசாயிகளுக்கு அரசின் சான்று பெற்ற விதை நெல் மற்றும் உரங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இத்தகைய தனியார் நிறுவனத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்ட அரசு சான்று பெற்ற விதை ஏ.எஸ்.டி 16. நெல் ரகம் என்ற விதை நெல்லை ஏராளமான விவசாயிகள் வாங்கி சுமார் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் குறுவை நடவு பணிகளை மேற்கொண்டார்கள்
இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடை பணிகள் தொடங்க உள்ள நிலையில் பயிரிடப்பட்ட ஏ.எஸ்.டி 16 நெல் ரகம் வயல்களில் 20 சதவீதம் பகுதி நெற்கதிர் வந்த நிலையில், மீதம் உள்ள 80 சதவீதம் பகுதி விதை நெல் முளைப்பு திறன் இல்லாததால் பயிர் வீணாகியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் வேளாண்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் விதை நெல்லை விவசாயிகளுக்கு விற்பனை செய்யும் தனியார் நிறுவனம் அரசு சான்று பெற்ற விதை நெல்லின் தரமற்ற விதை நெல்லை கலப்படம் செய்து விற்பனை செய்தால் இதுபோன்ற பிரச்சினை எழுதுவதாகவும் இதற்கு வேளாண்துறை அதிகாரிகளே முழு பொறுப்பு என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனை கண்காணிக்க வேண்டிய அந்தந்த பகுதி வேளாண்துறை அலுவலர்கள் பொறுப்பற்ற நடவடிக்கையால் பூவனூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்துள்ள குறுவை விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகியுள்ளனர்.
போலி கலப்பட விதைநெல்லை குறுவை சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு விதை நிறுவனம் மற்றும் தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்கினால் மட்டுமே விவசாயத்தையும், எங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு போலி கலப்பட விதை நெல் விற்பனை செய்யும் நிறுவனத்தின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு, கலப்பட விதைநெல்லை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி அதன் மூலம் அடுத்த கட்ட சம்பா, தாளடி பயிர் சாகுபடி பணிகளை மேற்கொள்ள அரசு பேருதவியாக இருக்க வேண்டும் இல்லை என்றால் தமிழ்நாடு விவசாயம் சங்கம் சார்பில் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர் .