காங்கயம் அருகே ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜெ.நகர் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில், அரசுப் போக்குவரத்துக் கழக காங்கயம் பணிமனை கிளை மேலாளரிடம் வியாழக்கிழமை கொடுத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம்- தாராபுரம் சாலை பகுதியில், காங்கயத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது ஜெ.நகர். இதில் சுமார் 80-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் இதனைச் சுற்றியுள்ள துண்டுக்காடு, வடக்கு கோட்டப்பாளையம், தளிஞ்சிக்காட்டு புதூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 700-க்கும் மேற்பட்டோர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த மக்களுக்கு பள்ளி, கல்லூரி செல்வதற்கும், வேலைக்கு செல்வதற்கும் காங்கயம், ஈரோடு மற்றும் தாராபுரம் சென்று வருகின்றனர். ஆனால் ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் இரண்டு நகரப் பேருந்துகள் மட்டுமே நின்று செல்கின்றன. ஈரோடு-தாராபுரம் வழித்தடத்தில் இந்த வழியாக செல்லும் மற்ற எந்தப் பேருந்துகளும் ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதில்லை.
எனவே, மேற்கண்ட பகுதி மக்கள் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்காக காங்கயம் மற்றும் தாராபுரம் செல்வதற்கு வசதியாக இந்த வழியாகச் செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் நின்று, பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெ.நகர் பேருந்து நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், இது தொடர்பான கோரிக்கை மனுவை காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும் வழங்கினர்.
இந்த மனு கொடுக்கும் போது ஜெ.நகர் பகுதி மக்கள் மற்றும் புரட்சிகர இளைஞர் முன்னணியைச் சேர்ந்த காங்கயம் நிர்வாகிகள் கவி, திருமூர்த்தி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.