என்ன பேசுவது! எப்படி பேசுவது!!
நூல் ஆசிரியர் : முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப.,
மதிப்புரை : கவிஞர் இரா.இரவி
வெளியீடு : நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம்,
41பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-50.
போன் : 044 26251968 ; பக்கங்கள் : 816 ; விலை. ரூ.1000


  முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் பேச்சு, எழுத்து என இரண்டு துறையிலும் வெற்றிக்கொடி நாட்டி வருபவர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மேடைகள், இலட்சத்திற்கும் மேலான மாணவர்கள், இளைஞர்களை சந்தித்து உரையாற்றி, தன்னம்பிக்கை விதைத்து வருபவர். பேச்சுக்கலை பற்றி எத்தனையோ நூல்கள் வந்து இருந்தாலும் இவ்வளவு பிரமாண்டமாக இதுவரை வந்ததே இல்லை.

  மேடைப் பேச்சாளர்களுக்கு வழிகாட்டி - இந்நூல். அவர்களுக்கு மட்டுமல்ல நேர்முகத் தேர்வு சந்திக்கும் இளைஞர்களுக்கு, வளரும் கவிஞர்களுக்கு, எழுத்தாளர்களுக்கு, குடும்பத்தில் எப்படி உரையாட வேண்டும், அலுவலகத்தில் எப்படி உரையாட வேண்டும், எந்த ஒரு பேச்சும் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் நூல். ஆவணம் என்று சொல்ல வேண்டும். படித்துவிட்டு வைத்துவிடும் சராசரி நூல் அல்ல இது.  நேரம் கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்ள, செதுக்கிக் கொள்ள செம்மைப்படுத்திக் கொள்ள உதவிடும் உன்னத நூல் இது. இது ஒரு பிரமாண்ட நூல். ஒரே நேரத்தில் வாசித்து முடித்துவிட முடியாது. ரசித்து, ருசித்து நேரம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்க வேண்டிய நூல் இது.

  முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் ஒவ்வொரு நூலும் MASTER PIECE என்றே சொல்ல வேண்டும். அவருடைய ஒவ்வொரு நூலையும் அவரே வெல்லும் வகையில் பிரமிக்கத்தக்க வகையில் படைத்து வருகிறார். ‘இலக்கியத்தில் மேலாண்மை’ நூல் வந்தபோது தஞ்சை பல்கலைக்கழகத்தின் முன்னை துணைவேந்தர் திருமலை அவர்கள் குறிப்பிட்டார்கள்,  ‘இப்படி ஒரு நூலை திரு. இறையன்பு அவர்களே நினைத்தாலும் திரும்ப படைக்க முடியாது’ என்று.  அதுபோலவே, ‘மூளைக்குள் சுற்றுலா’ நூல் வந்தபோது பிரபல மருத்துவர்கள் எல்லாம் படித்துவிட்டு வியந்து போனார்கள். மருத்துவர்களான நாங்கள் அறியாத பல விசயங்கள் இவர் அறிந்து எழுதி பிரமிக்க வைத்துள்ளார் என்று பாராட்டினார்கள். இந்த நூலும் அப்படித்தான். பேசும் கலை பற்றி, இப்படி ஒரு நூலை இனி யாரும் எழுத முடியாது என்று அறுதியிட்டுக் கூறலாம்.வாங்கி படித்துப் பாருங்கள், நான் எழுதியவை உண்மை என்பதை உணருவீர்கள். நல்ல தரமான தாள்கள், சிறப்பான அச்சு, பொருத்தமான வண்ணப்படங்கள் என நல்லமுறையில் பதிப்பித்துள்ள நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்குப் பாராட்டுகள்.

  நூலின் உள்ளே தகவல் பரிமாற்ற வரலாறு, உடல்மொழி இலக்கணம், உள்ளடக்கம், மேடையில் கதைகள், மேடையில் சிறக்க, மேடை நகைச்சுவை, மேடைகள் பலவிதம் என 134 தலைப்புகளில் அற்புதமாக எழுதி உள்ளார். பேசும் கலை பற்றி தகவல் தொடர்பு வரலாற்றில் தொடங்கி பேச்சாளர்களின் வகைகள் வரை எடுத்து இயம்பி உள்ளார்.

  முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்களின் பல உரைகளை நேரில் கேட்டு இருக்கிறேன். இணையத்திலும், புலனத்திலும், வலையொளியிலும், தொலைக்காட்சிகளிலும் கேட்டு இருக்கிறேன்.  அவர் தெளிந்த நீரோடை போன்ற நடையில் பேசுவார். கவனச்சிதறல் வராதவண்ணம் யாரும் இடையில் வெளியேறாதவண்ணம் மிகச்சிறப்பாக உரையாற்றுவார்.  ஒருமுறை பேசிய தகவலை, மறுமுறை வராமல் பார்த்துக்கொள்வார்.  ஒவ்வொரு உரையும் புத்தம்புதிதாக இருக்கிறது. என்றும், எப்போதும் கேட்டு ரசிக்கும்வண்ணம் தகவல் சுரங்கமாக சிறுசிறு கதைகள், அயல்நாட்டு அறிஞர்களின் மேற்கோள்கள் என அனைத்தையும் பயன்படுத்துவார். கையில் சிறுகுறிப்பின்றி நினைவாற்றலுடன் பேசும் வல்லமை மிக்கவர். சிறந்த பேச்சாளரின் பேசும் கலை பற்றிய பிரமாண்டமான படைப்பு இந்நூல்.

  ஒரு பிரபல பேச்சாளர் இருந்தார். அவரைச் சொல்வார்கள், முதல்முறை கேட்டால் டாப்.  இரண்டாம் முறை கேட்டால் டேப் என்பார்கள்.  எங்கும், எப்போதும், எல்லா மேடையும் ஒரே பேச்சு, பேசியதையே பேசுவது, கூறிய நகைச்சுவைகளையே திரும்பக் கூறுவது, இப்படி பேசுபவர் அல்ல இறையன்பு அவர்கள்.  தினந்தோறும் புதுப்புது தகவல்களை வாரி வழங்கும் வள்ளல்.

  நடமாடும் பல்கலைக்கழகம், நடமாடும் என்சைக்ளோபீடியா, நடமாடும் கூகுள் என்றே சொல்லலாம்.  திருக்குறள், கம்ப இராமாயணம் மட்டுமல்ல, மேல்நாட்டு இலக்கியங்களையும் அறிஞர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி, பொருத்தமான மேடையில் பொருத்தமான இடத்தில் மேற்கோள் காட்டி பேசியும், எழுதியும் வருபவர்.  சிலருக்கு நன்றாக எழுத வரும் ; சிலருக்கு நன்றாக பேச வரும்; வெகுசிலருக்கு நன்றாக எழுதவும், பேசவும் வரும். அப்படிப்பட்ட வெகுசிலரில் சிகரமாக விளங்குபவர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள்.

  முதுமுனைவர் என்பதையோ, இ.ஆ.ப. என்பதையோ கூட எழுதாமல் இறையன்பு என்று மட்டுமே புத்தகத்தில் உள்ளது.  மிகப்பெரிய அறிஞர். அடக்கமாக, எளிமையாக இருப்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு.  என்ன பேசுவது எப்படி பேசுவது கேள்விக்குறி போடாமல் ஆச்சரியக்குறியிட்டு படிக்கும் வாசகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ள பிரமாண்டமான படைப்பு. வாழ்த்துகள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *