விழி காணும் மொழிகள் !

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி செல் 9789788989

விலைரூபாய் 65.6.வேங்கடேசுவரா நகர் ,சுந்தர் நகர் விரிவு ,திருநகர்,மதுரை.6

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் ஆசிரியராக
பணியாற்றி ஒய்வுப் பெற்று ,முழு நேர இலக்கியவாதியாக இயங்கி வரும்
படைப்பாளி 67 .வயது இளைஞர் . தள்ளாத வயதிலும் தளராத தேனீயாக உழைத்து
வரும் உழைப்பாளி .கவிப்பேரரசு அருமைநாதன் அவர்கள் தோற்றுவித்த தாய்மண்
இலக்கியக் கழகத்தின் மதுரைக் கிளை தலைவராக இருந்து பல்வேறு இலக்கியப்
பணிகள் செய்து வருபவர் .1992 ஆம் ஆண்டில் எனக்கு கவிப்பேரரசு அருமைநாதன்
அவர்களை அறிமுகம் செய்து வைத்து எனது முதல் நூலான கவிதைச்சாரல் வெளிவர
காரணமாக இருந்தவர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள்.

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி இவர் எழுதாத இதழ்களே இல்லை
என்று சொல்லும் அளவிற்கு தினமணி சிறுவர்மணி உள்ளிட்ட பல்வேறு இதழ்களில்
எழுதி வருபவர் .பல்வேறு இதழ்களில் பிரசுரமான கவிதைகளைத் தொகுத்து
நூலாக்கி உள்ளார்கள் .விழி காணும் மொழிகள் ! நூலின் பெயரே கவித்துவமாக
கவிதை நூல் என்பதை பறை சாற்றும் விதமாக உள்ளது .இந்த நூலை தாய் தந்தைக்கு
படையலாக்கி பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் .

நூல் ஆசிரியர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி அவர்கள் நல்ல கவிஞர்
என்பதையும் தாண்டி நல்ல மனிதர் . எழுதுவதோடு நின்று விடாமல் திருநகர்
பகுதி மக்களுக்கு பல தொண்டுகள் செய்து வருபவர் .இந்நூல் வெளியீட்டு
விழாவிற்கு அவர் வசிக்கும் திருநகர் பகுதியில் இருந்து குடும்பத்துடன்
அனைவரும் வந்து இருந்தனர் .திருமண விழா போல கூட்டம் நிரம்பி வழிந்தது
.நானும் சென்று வாழ்த்துரை வழங்கி வந்தேன் .
மதுரையில் என் போன்ற, நூல் ஆசிரியர் இலக்குமணசுவாமிபோன்றகவிஞர்களை
வளர்த்து விடும் மதுரைமணி ஆசிரியர் சொ .டயஸ் காந்தி தலைமை வகித்தார் .
தமிழ் வளர்ச்சித் துறையின் உதவி இயக்குனர் பசும்பொன் வெளியிட காவல்துறை
துணை ஆணையர் திருநாவுக்கரசு பெற்றுகொண்டார். எழுத்தாளர் இந்திரா
சௌந்தரராஜன் ஆய்வுரை நிகழ்த்தினார் .பலரும் கவிதைகளை மேற்கோள் காட்டி
பேசினார்கள் .விழா கோலாகலமாக நடைபெற்றது .

இளைஞர்களை நெறிப்படுத்தும் விதமாக நல்ல பல கருத்துக்களைக் கூறும்
கவிதைகள் நிறைய உள்ளது .பாராட்டுக்கள் . நூலில் உள்ள கவிதைகள் அனைத்தும்
சிறப்பாக இருந்தபோதும் பதச் சோறாக சில மட்டும் தங்கள் பார்வைக்கு இதோ .

இளைஞர்களை இன்பமாக வாழுங்கள் ..
சிந்தனைகளை சிந்தையில் நாளும்
செதுக்குங்கள் ! வாழ்வுச்
சிறகுகளை நம்பிக்கையுடன் விரித்தே
வாழ்வை விரிவாக்குங்கள் !

புத்தாண்டை வரவேற்று வடித்த கவிதை நன்று .

புதிய ஆண்டே நீ வா !
புதிய ஆண்டே பொலிவுடன் வா ! இன்பத்தை
பதியம் போட்டப் பரவசத்தை நீ தா !
அதிசய உலகமதை உருவாக்கி வா !அதில்
அதிரச சுவையை ஊட்டியே வா !

இளைஞர்கள் பலர் சிந்திக்காமல் மூடத்தனத்தில் தற்கொலை செய்து வரும் செய்தி
தினந்தோறும் செய்தித் தாளில் வருகின்றது .தற்கொலை செய்வது கோழைத்தனம்
என்பதை வலியுறுத்தி மண்ணில் நல்ல வண்ணம் வாழ வகை சொல்லும் கவிதை .

எழுச்சியோடு எழு !
ஓ மானிடா
இப்பூலகில் பிறந்ததே
நீ வாழத்தான் !
மரணத்தை தழுவிட அல்ல !
உன் வாழ்க்கைக்கு
நம்பிக்கையும் நாணயமும் தான் உயிர்நாடிகள் !
துன்பம் – துயரம் இவைகள் கண்டு நீ அஞ்சாதே !

தமிழ்ப் பற்று மிக்கவர் கவிமுரசு சு .இலக்குமணசுவாமி.தமிழ் மொழி
பற்றியும் பல கவிதைகள் .வடித்துள்ளார் .

எங்களின் நேசிப்பு !
எங்கள் மொழி எங்கள் மொழியென்றே
எமது தமிழை நாளும் உச்சரிப்போம் .
எல்லா நாட்டாரும் பாராட்டுகின்ற
எமது பண்பட்ட மொழியை நாளும் மெச்சிடுவோம் !

உலகில் உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அன்னை என்ற உறவிற்கு ஈடு இல்லை
.அன்னையை பற்றி எழுதியுள்ள கவிதை .

அன்னை !
அன்னையெனும் சொல்லே
அமுதூட்டும் சொல்லடா !
என்னை உருவாக்க
எணியான சொல்லடா !
தண்ணி உருக்கிய
தன்மானச் சொல்லடா !

சொல்லடா ! சொல்லடா ! என்று எழுதி சொல் விளையாட்டு விளையாடி .உள்ளார்
பாராட்டுக்கள் .

இலக்கியம் பயனற்றது என்று ஒரு சிலர் புரியாமல் சொல்லி வருகின்றனர்
.அவர்களுக்கு இலக்கியம் பற்றி விளக்கும் விதமாக ஒரு கவிதை .

இலக்கியமே வாழ்க்கைக்கு ஏணி !
இலக்கியமே வாழ்க்கைக்கு ஏணி ! -உலகு
இயலில் கைக்குள் அடக்கம் இன்பத் தோணி
விழிகளின் பதிவில் விண்ணப்பம் -உயர்
மொழிகளின் கனிவுடன் கூடிய தீர்மானம்
இலக்கியமே வாழ்க்கைக்கு இல்லை எனில் -தமிழர்
இதயமெல்லாம் இளைக்கும் !

தமிழகத்து விவசாயிகள் நிலத்திற்கு தண்ணீர் இன்றி கண்ணீர் விட்டு நாள்
தோறும் தற்கொலை செய்து வருகின்றனர் .கல் நெஞ்சம் படித்த கர்நாடகமும்
உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் மதிக்காமல் தண்ணீர் தர மறுத்து
வருகின்றனர் .தட்டிக் கேட்க ஒரு நாதி இல்லை .தமிழகம் தொடர்ந்து அண்டை
மாநிலங்களால் வஞ்சிக்கப்பட்டு வருகின்றது . மைய அரசும் வேடிக்கை
பார்த்து மகிழ்கின்றது .நாட்டில் நடக்கும் அவலம் குறித்து எழுதியுள்ள
கவிதை.

நெல் – என்னும் சொல் இல்லை !
உழவனின் கண்ணீரே
மடை திறந்த வெள்ளமாகிறது !
உழவனின் வறுமையே
விதையாய் விதைக்கபடுகிறது !
விலை நிலங்களெல்லாம் வீடுகள் ஆச்சு !
இயற்கை கூட உழவனுக்கு சதி செய்திடுச்சு !
இந்நிலை தொடர்ந்தால் இனி நெல் – என்னும் சொல்
இனிஇல்லை ! இல்லை ! இல்லை !

சிந்திக்க வைக்கும் கருத்துள்ள நல்ல துளிப்பாக்களும் நூலில் உள்ளது.
பாராட்டுக்கள் .

வியர்வை உலர
வியர்வை சிந்தாத
மின்விசிறி !

காதலை பாடாத கவிஞர் இல்லை .காதலை பாடாத கவிஞர் கவிஞரே இல்லை .இவரும் பாடி
உள்ளார் காதலை .

இலைகள் உதிர்ந்தன
மனதில் உதிரவில்லை
அவள் நினைவுகள் !

அவள் விழிகள் சந்தித்தால்
என் மொழிகள்
மவுனமாயின !

மனிதநேயம் மறந்து மோதி வீழும் மனித விலங்குகள் பற்றியும் எழுதி உள்ளார் .

கலவரத்தீயில்
கருகியது
மனிதநேயம் !

ஆழிப்பேரலை பற்றி,ஏழைகளின் தீபாவளி வலி பற்றி இப்படி பல்வேறு
தலைப்புகளில் கவிதை எழுதி உள்ளார் .குழந்தைகளுக்கு பண்பாடு போதிக்கும்
குழந்தைப்பாடல்கள், கவிதைகள் .பல்சுவை விருந்தாக உள்ளது .முத்தமிழ் போல
முப்பால் போல, ஒரே கல்லில் மூன்று மாங்காய் அடித்தது போல .ஒரே நூலில்
மரபுக்கவிதை,புதுக்கவிதை,ஹைக்கூ கவிதை மூன்றும் உள்ளது . பாராட்டுக்கள்
.தொடர்ந்து எழுதுங்கள் .

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *