• ஹைக்கூ உலா
  • கவிஞர் இரா. இரவி

ஹைக்கூ உலா கவிஞரின் 17வது
கவிதை நூல். அவர் எடுத்துக்
கொண்ட எந்தத் தலைப்பிலும் கவி
புனையும் ஆற்றல் மிக்கவர்
என்பதை கவிஞரின் படைப்புகளில்
நான் வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.
இந்த நூலும் அதற்கு விதிவிலக்கல்ல. இயற்கை, மரங்கள்
மலர்கள், பறவைகள் என நம்மோடு
சேர்ந்து வாழ்பவை குறித்தும்
எழுதியுள்ளார்.

உலகுக்கு உணவளிக்கும் உழவரின்
இன்றைய வாழ்க்கைச் சூழலையும்
“நேரமில்லை / உழவர்களைப்
பார்க்க / வெளிநாடு பயணம்”
என்று அரசியலாரின் இயலாமைத்
தனத்தைச் சாடியவர்,
“உலகம் சுற்றும் வாலிபரே/
உள்நாட்டையும் பாருங்கள்/
உழவர்கள் தற்கொலை” என்று
அரசியலாருக்கு வேண்டுகோளும்
விடுக்கிறார்.

“பகிர்ந்துண்ணும் பறவை /
தனித்துண்ணும் மனிதன் /
உயர்திணை எது?” என்று கேள்வி
எழுப்பி, மனிதர்களையும் அவர்தம்
குணநலன்களையும் அழகாகப்
பதிவு செய்கிறார்.

“மனிதனுக்கு / அழகு /மனித நேயம்
என்று மாந்தப் பண்பினையும்
அறிவுறுத்திச் செல்கிறார்.

இன்று நாட்டில் எங்கும் நிலவும்
ஜாதிய வேறுபாடுகள், அதனால்
ஏற்படும் இன்னல்கள், அடக்கு
முறைகளையும் விட்டுவிடவில்லை
கவிஞர்.
“உயர் திணையிலிருந்து /
அஃறிணைக்கு இறக்கம் /
சாதி வெறி” என்பதுடன்

“சாதியில் இல்லை / எண்ணத்தில்
உள்ளது / உயர்வு தாழ்வு” என்று
சாதிய வேறுபாட்டுக்கு புதிய
பொருளுரைக்கிறார்.

சென்னைக்கு விரையும் எட்டு வழிச்
சாலைக்காக விளைநிலங்களுடன்
மரங்களும் தொடர்ந்து அடியோடு அழிக்கப்பட்டுவரும் நேரங்களில்
மரங்களை வெட்டிச்சாய்க்காமல்
இடப்பெயர்ச்சி செய்ய வேண்டும்
என்கிறார்.
“வெட்டாமல் / வேரோடு இடப்
பெயர்ச்சி / மரம் ” இயற்கையை
விரும்பும் ஆர்வலராக கவிதை
பாடுகிறார்.

மேலும் கார்காலத்தில் மழைக்காக
ஒதுங்கிய மரத்திலிருந்து நம் மீது
விழும் மழைத்தூறலின் சிலிர்ப்பை
அனுபவித்தால் மட்டுமே உணர
முடியும்.
“மழை விட்டபின்னும் / சாரல் /
மரத்திலிருந்து” என்று கவிதை
மழையில் நம்மையும் நனையச்
செய்கிறார் கவிஞர்.

ஔவைப்பாட்டி சொன்ன அறம்
செய விரும்பு நமக்கு சிறுவயதில்
பாடமாக ஊட்டப்பட்டிருக்கிறது.
கவிஞரும் தன் பாணியில்
“அடுத்தவருக்குத் தீங்கு/
செய்யாமலிருத்தல் / அறம்” என்றும்

“வன்முறை / விரும்பாதிருத்தல் /
அறம்” என்றும்
“வறுமையிலும் / செம்மை / அறம்”
என்றும் புது விளக்கமளிக்கிறார்.

இன்னும் இன்னும், மேலே மேலே சொல்லிக்கொண்டே போகலாம்
என்று விருப்பந்தான், ஆனால் அது
கவிஞரின் நூலை விடப்பெரிதாக
போகலாம். எனவே இன்னும்
மேலே மேலே எழுதச் சொல்லி
வாழ்த்துகிறேன்.

வெ. கலிவரதன்
புதுச்சேரி

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *