தனித்தமிழ் இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது
தனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் !

தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம்
தனித்தமிழ் பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் !

வடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம்
வந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் !

ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம்
உணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் !

நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி
நடப்பவைகளை தமிழுக்கு நன்மையாகட்டும் !

தமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ்
தமிழர்களே நல்ல தமிழ் பேசுவோம் எழுதுவோம் !

அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்வோம்
அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி நம் தமிழ் !

ஆலயங்களில் இனி தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்
அந்நியமொழி இனி ஆலயத்தில் ஒலிக்க வேண்டாம் !

உயர்நீதி மன்றத்திலும் இனி தமிழ் ஒலிக்க வேண்டும்
உயரதனிச் செம்மொழி தமிழ் சிறப்புற வேண்டும் !

உயர்கல்விகளும் இனி தமிழில் வர வேண்டும்
உரிய உயர்ந்த இடம் தமிழுக்கு வழங்கிட வேண்டும் !

தாய் மொழியிலேயே அனைத்துக் கல்வியும்
தரமாக வழங்கியதால் சிறந்தது சப்பான் நாடு !

தமிழர் திருநாளாம் தை திங்கள் நன்னாளில்
தமிழர்கள் யாவரும் தமிழை வளர்க்க உறுதி ஏற்போம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *