ஹைக்கூக் கவிதையைத் தமிழுக்கு ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்தவர் மகாகவி
பாரதி. பின்னர் வளர்த்தவர்கள் பலர். பரப்பியவர்கள் சிலர். சிலரில் ஒருவர் கவிஞர் இரா. இரவி.
கவிதைச் சாரம் முதல் சுட்டும் விழி வரை ஆயிரம் ஹைக்கூத் தவிர, மொத்தம்
பதினொரு தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். பதினொன்றில் எட்டுத் தொகுப்புகள்
ஹைக்கூத் தொடர்பானது. அதிலொன்று ஹைக்கூத் தொகுப்புகளின் மீதான விமரிசனங்கள்
அடங்கியதாகும். இலக்கியத்தின் அனைத்து வகைகளையும் விட இரா. இரவிக்கு மிகவும்
பிடித்தமான வடிவம் ஹைக்கூ என்பதையே தொகுப்புகள் உறுதிப் படுத்துகின்றன.

ஹைக்கூ ஜப்பான் மண்ணுக்குரியது. தமிழில் எழுத முடியாது, எழுத கூடாது என்று
கடுமையான விமரிசனங்கள் உண்டு. எதிர்ப்புகள் உண்டு.

விமரிசனங்களையும் மீறி எதிர்ப்புகளையும் தாண்டி ஹைக்கூவைத் தமிழக்கு ஏற்ப, தமிழ் மண்ணுக்கு பொருத்தமாக எழுதி ஹைக்கூவை பொது மக்களிடையே கொண்டு சென்றவர் கவிஞர் இரா. இரவி. ஹைக்கூவை
தமிழில் எழுத முடியும் என்று நிரூபித்து வருகிறார். எழுதியும் வருகிறார்.

தமிழில் சமீப காலமாக படைப்பாளிகளின் அனைத்து படைப்புகளையும் தொகுத்து
வெளியிடுவது ஒரு மரபாகி வருகிறது. மூத்த படைப்பாளிகளின் கவிதைகளோ கட்டுரைகளோ
கதைளோ செம்பதிப்பாகிறது. தற்போது இளைஞர்களும் அம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

கவிஞர் திலக பாமாவும் தன்
கவிதைகளைத் திரட்டி ‘ திலகபாமா கவிதைகள்’ என்று வெளியிட்டுள்ளார். இம்முயற்சிகள் தொடர்கின்றன. ஹைக்கூவில் அத்தகைய முயற்சிகள் குறைவாகவே
நிகழ்ந்துள்ளன. கவிஞர் மு. முருகேஷ் அவர்களும் தங்களிள் ‘ ஆயிரம் ஹைக்கூ :க்களைத் தொகுத்து
வெளியிட்டுள்ளார். இவ் வரிசையில் கவிஞர் இரா. இரவி அவர்களும் தன்னின் ஏழு ஹைக்கூ
தொகுப்புகளில் இருந்து சிறந்தவற்றை, சரியானதை, தனக்குப் பிடித்தை, சொல்லக் கூடியவற்றைத் தெரிவு செய்து புதியதாக சிலவற்றையும் எழுதி ‘ ஹைக்கூ ஆயிரம் ‘ என்னும் தொகுப்பாக்கித் தந்து ஹைக்கூ பாதையில் ஹைக்கூவிற்கு ‘ ஹைக்கூ ஆயிரம் மண்டபம்’ என்று ஒரு
மண்டபத்தைக் கட்டியுள்ளார்.

தேர்வில் பங்கெடுத்துத் தேர்வு பெற உதவிச் செய்துள்ளார்.
முனைவர் இரா. மோகன். ஹைக்கூ பிரியர்களும் ஹைக்கூ வாசிப்பாளர்களும் ஆயிரம்
ஹைக்கூ மண்டபத்தில் இளைப்பாறிச் செல்லும் வண்ணம் தொகுப்பு உள்ளது.
முன்னோடிகளான முனைவர் மித்ராவை விடவும் கவிஞர் மு. முருகேஷை விடவும் கூடுதலாக ஹைக்கூக்கள் படைத்து அனைவரையும் விட ‘ ஹைக்கூ முன்னோடி’ யாக அடையாளப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி கவிஞரைப் பற்றி தி ஹிந்து ஆங்கில நாளிதழ் ஒரு கட்டுரை எழுதி உள்ளது. அதில் 1500க்கும் மேற்பட்ட ஹைக்கூக்கள் இயற்றி உள்ளதாக ஒரு தகவல் பதிவாகியுள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.
ஹைக்கூவை வளர்த்தவர் கவிஞர் இரா. இரவி எனில் இரா. இரவியை வளர்த்தவர்
முனைவர் இரா. மோகன் என்றால் மிகையில்லை. கவிஞரின் ஒவ்வொரு கட்டத்திலும்
துணையாய் இருந்து துாக்கி விட்டவர். ‘ ஆயிரம் ஹைக்கூ ‘த் தொகுப்புக்கும்
அணிந்துரைத்து அழகு சேர்த்துள்ளார்.
‘ஹைகூ கவிதை அவருக்குச்் செல்லப்பிள்ளை. ஹைகூ கவிதையின் செல்லப் பிள்ளை இரவி ‘ என்று புகழாரம் சூட்டியுள்ளார். முனைவர்
இரா. மோகன் அவர்களுக்குச் ‘ செல்லப் பிள்ளை ‘யாக இரவி விளங்குகிறார். முனைவர்
இரா. மோகனுக்கு இணையாக இரவியின் வளர்ச்சியில் அக்கறைக் கொண்டவர் முனைவர்
வெ. இறையன்பு இ. ஆ. ப.. இறையன்புவும் அணிந்துரைத்து அலங்காரம் செய்துள்ளார்.
“எப்போதும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. ரவி” என்று அடையாளப்படுத்தியுள்ளார்.
ஹைக்கூவாகவும் இயங்கிக் கொண்டிருப்பவர் இரா. இரவி. கவிஞர் இரா. இரவி ஓர்
‘ஹைக்கூ நதி’ யாக இயங்குவதற்கு காரணமாக இரண்டு கரைகளாக இரண்டு
முனைவர்களும் உள்ளது ஒரு சிறப்பம்சம்.

ஒரு படைப்பாளியின் ஒட்டு மொத்தத் தொகுப்பு வரும் போது தொகுப்பு வாரியாகவே
தொகுப்பர். ‘ ஆயிரம் ஹைக்கூ’
என்னும் இத் தொகுப்பை இரவி பாடு பொருள் வாரியாக பகுத்துத் தந்துள்ளார்.

தமிழ்-தமிழர்- தமிழ் நாடு, சமுதாய முன்னேற்றம், முற் போக்குச் சிந்தனை, மனித நேய மாண்பு, அரசியல் அங்கதம், இயற்கைச் சித்தரிப்பு, தத்துவத் தேடல்,பெண்ணியப் பதிவு, காதல் ஓவியம், தன் முன்னேற்றச் சிந்தனை, வாழ்வியல் விழுமியம், பெருந் தகையோர் சால்பு, தொழிலாளர் நிலை, கல்வி உலகு, ஊடக விமர்சனம், ஹைக்கூ மொழி, குழந்தைகள் உலகு, மாற்றுத் திறனாளிகள் மாண்பு, அழகின் சிரிப்பு, பொதுவியல் என்னும் தலைப்புகளில் ஹைக்கூக்கள் பிரிக்கப் பட்டுள்ளன.

ஒவ்வொரு தலைப்பிலும் பல ஹைக்கூக்கள். எந்த ஒரு பாடு பொருளைப் பற்றி ஹைக்கூ எழுதினாலும் அப் பொருளின் அத்தனைப் பாரிமாணங்களிலும் எழுதித் தன் ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார். ஒரே பொருளை பல கோணங்களில் எழுதி சிந்திக்கச் செய்துள்ளார்.

கவிஞர் இரா. இரவி அதிக ஹைக்கூக்களை எழுதி பேசச் செய்தவர் எனில் ஹைக்கூக்களால் அதிகம் பேசப் பட்டவரும் இவரே ஆவார். இவரின் ஹைக்கூக்கள் பாரதி தாசன் பல்கலைக் கழகம், காமராசர் பல்கலைக் கழகம், தியாக ராசர் கல்லூரி, வன்னியப்பெருமாள் பெண்கள் கல்லுாரி உள்பட பல கல்லூரிகளில் பாட நுால்களில் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் இவரின் ஹைக்கூக்கள் பாடம் என்பது ‘ ஆயிரம் ஹைக்கூ’ க்களில் காண முடிகிறது.

தமிழ் மீது பற்றுக் கொண்டவர் கவிஞர். தமிழர் பால் அக்கறை மிக்கவர். எனினும் ஒட்டு மொத்த சமுக முன்னேற்றத்திலும் தீராத வேட்கை உடையவர். அவரின் ஒவ்வொரு ஹைக்கூவிலும் ஏதாவதொரு அக்கறையை அறிய முடியும். மனிதர்களுக்கு எதிராக சமூகத்திற்கு ஒவ்வாத செயலைக் கண்டிப்பதாகவே இரவியின் ஹைக்கூக்கள் உள்ளன.

உடனுக்குடன் தன் எண்ணத்தை , எதிர்ப்பை, கருத்தை, ஆதரவை ஹைக்கூக்கள் மூலம் வெளிப்படுத்தி விடுகிறார். ஹைக்கூ என்னும் வடிவமும் கவிஞருக்கு நன்கு பொருந்தி உள்ளது. ஹைக்கூவும் கவிஞருக்கு நன்றாக கை வரப் பெற்றுள்ளது. ஹைக்கூ கவிஞரின் ‘கைக்கூ’ யாகியுள்ளது. இந்தியத் தமிழர்களுக்கு ஆதரவாக மட்டுமின்றி ஈழத் தமிழர்களுக்கும் ஆதரவாக, ஆறுதலாக குரல் கொடுத்துள்ளார். மனிதர்கள் தவிர இயற்கையையும் பல ஹைக்கூக்களில் படம் பிடித்துக் காட்டடியுள்ளார். சுற்றுச் சூழல் குறித்தும் பேசியுள்ளார். பாடாத பொருள் பாரினில் இல்லை.

ஒரு தொகுப்பைக் குறித்து விமரிசிக்கும் போது ஹைக்கூக்களை எடுத்துக் காட்டுவது மரபு. சில வேளைகளில் அது படைப்பாளிக்குச் செய்யும் தீங்கு ஆகி விடுகிறது. வாசகன் வாசலிலேயே நின்று விடும் ஆபத்து ஏற்பட்டு விடுகிறது.எடுத்துக்காட்டாவிடில் படைப்பாளிக்குச் செய்யும் துரோகமாகிறது. ஆயிரம் ஹைக்கூ’ வில் எதை விடுவது , எதைத் தொடுவது என்பது மிக சிரமம். எடுத்துக் காட்டவேண்டியவை எண்ணற்றவை. எனினும் மரபுக் கருதி இரண்டு ஹைக்கூக்கள்

தடுக்கி விழுந்ததும்

தமிழ் பேசினாள்

அம்மா

இது தொகுப்பின் முதல் ஹைக்கூ

வழிமேல் விழிவைத்து

முதியோர் இல்லத்தில்

முதியோர்கள்

இது தொகுப்பின் இறுதி ஹைக்கூ.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பர். ‘ஆயிரம் ஹைக்கூ’ வில் ஒவ்வொன்றும்
ஒரு விதம்். வாசித்துப் பார்த்தாலே வாசகர்கள் உணர முடியும்.

கவிஞர் இரா. இரவியின் ஹைக்கூக்களுக்கு வாசகர்கள் பஞ்சமில்லை. ஏட்டில் வாசிப்பவரை விட இணையத்தில் வாசிப்பவர் மிகுதி. eraravi.com,kavimalar.com, eraraviblogspot.com என்னும் மூன்று வலை தளத்தில் ஹைக்கூக்களை ஏற்றி தமிழ் ஹைக்கூவிற்கு உலக அந்தஸ்தைப் பெற்றுத் தந்துள்ளார். உலகெங்கும் பரவச் செய்துள்ளார். கணினி யுகத்திற்கும் ஹைக்கூக் கவிதை ஏற்றதாக உள்ளது, இணையத்தின் முலமும் ஹைக்கூஇதயங்களை இணைத்துள்ளார். உதவிச் சுற்றுலா அலுவலரான கவிஞர் ஹைக்கூவை உலகைச் சுற்றி உலாவரச் செய்துள்ளார்.

கவிஞர் இரா. இரவி ஏராளமாக ஹைக்கூக்களை எழுதுகிறவர் என்று உண்டு ஒரு பேச்சு.ஆனால் இரவிக்கு ஹைக்க ஒரு மூச்சு. ஒவ்வொரு மூச்சு வெளியேறும் கணத்தில் ஒரு ஹைக்கூ வெளிப் பட்டு விடும். கவிஞரின் பலம் பலவீனம் நிறைய எழுதுவதே. குற்றச்சாட்டு எழுப்பப் பட்ட போதும் ஏற்றதொரு கருத்தை எடுத்துரைக்க ஹைக்கூ என்னும் வடிவத்தை கவிஞர் விடாது தொடர்வது பாராட்டுக்குரியது. ஹைக்கூவை பரவாலாக்குவதுடன் கருத்தையும் பரப்பி வருகிறார். ‘ ஆயிரம் ஹைக்கூ, ‘ என்னும் இத்தொகுப்பு ஹைக்கூ உலகிற்கு ஒரு படி முன்னேற்றம் என்றால் சமூகத்தையும் அதிலுள்ள ஹைக்கூக்கள் ஒரு படி முன்னேற்றும் என்பதில் ஐயப் பாடு இல்லை. ஹைக்கூவை ஆய்வுச் செய்யும் மாணவர்களுக்கு ‘ ஆயிரம் ஹைக்கூ’ ஆதாரமாக இருக்கும். கவிஞர் இரா. இரவியின் வாழ்வில் ‘ ஆயிரம் ஹைக்கூ’ ஒரு சாதனை. வானதி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டு ஹைக்கூவிற்கு ஒரு புதிய தள்த்தை ஏற்படுத்தியுள்ளது.

‘ஆயிரம் பூக்கள் மலரட்டும் ‘ என்றார் மா சேதுங்.
‘ஆயிரம் ஹைக்கூ ” க்களை மலர்த்தியுள்ளார் இரா. இரவி.
இரண்டின் நோக்கமும் ஒன்றே.

வெளியீடு
வானதி பதிப்பகம் சென்னை

பொன். குமார்
9003344742

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *