ஊர் சுற்றும் மனசு!

நூல் ஆசிரியர் : கவிஞர் தயாநிதி !

வாசகன் பதிப்பகம், 167, AVR காம்ப்ளக்ஸ்,
அரசு கலைக்கல்லூரி எதிரில், சேலம் – 636 007.
பேச : 98429 74697, பக்கம் : 96, விலை : ரூ. 90.

**

  நூல் ஆசிரியர் கவிஞர் தயாநிதி அவர்களுக்கு இது மூன்றாவது படைப்பு.  வாசகன் பதிப்பக உரிமையாளர், இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் மிக நேர்த்தியாக பதிப்பித்து உள்ளார், பதிப்புரையும் அருமை.

  திரைப்படப் பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் அணிந்துரை நூலிற்கு மகுடமாக உள்ளது.  திருப்பூர் கவிதாயினி அம்பிகா குமரன் அணிந்துரை நூலின் அழகிற்கு மேலும் அழகு சேர்ப்பதாக உள்ளது.  ஆசிரியர் கவிஞர் தயாநிதியின் தன்னுரையும் நன்று.

  ஹைக்கூ கவிதை
  உற்று நோக்கப்படுகிறது
  மூன்றாம் வரி!

முதல் ஹைக்கூ கவிதையே ஹைக்கூவின் சிறப்பை எடுத்து இயம்பும் விதமாக உள்ளது. பாராட்டுக்கள்.

  பசியில் குழந்தை
  பாலுக்கு அழுகிறது
  கற்சிலைகள்!

கொடிது வறுமை கொடிது, வறுமையை ஒழிப்போம் என்று ஆட்சிக்கு வருபவர்கள், மக்கள் வறுமையை ஒழிப்பதே இல்லை. பாலுக்காக அழும் குழந்தைகள் இருக்கும் நாட்டில் கற்சிலைகளுக்கு பாலாபிஷேகம் தேவையா? என்று சிந்திக்க வைக்கிறார்.

  குளித்தவள்
  மீண்டுமாய் அழுக்காகிறாள்
  குழந்தையைக் குளிப்பாட்டி!

காட்சிப்படுத்துவது ஹைக்கூ உத்திகளில் ஒன்று. அந்த வகையில் இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களுக்கு குழந்தையைக் குளிக்க வைக்கும் தாயைக் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார். குழந்தையைக் குளிக்க வைக்கும் போது குழந்தையின் சேட்டை காரணமாக தாயின் சேலையும் அழுக்காவது இயல்பு.

  பெரிய கவிஞன்
  சின்னதாய் எழுதுகிறார்
  ஹைக்கூ கவிதை.

கவிக்கோ அப்துல் ரகுமான் பெரிய கவிஞர், அவர் சிறிய கவிதை ஹைக்கூ எழுதினார். ஹைக்கூ கவிதையை பிரபலம் அடையச் செய்தார். அதனை நினைவூட்டியது இந்த ஹைக்கூ.

  காகிதப் பூ
  வாசமாய் இருக்கிறது
  பறிப்பவரின் கூந்தல்

கூந்தலுக்கு இயற்கையிலேயே மனம் உண்டா? என்ற திருவிளையாடல் கேள்விக்கு விடை சொல்லும் விதமாக எழுதிய ஹைக்கூ நன்று.

  குளிர்சாதனப் பெட்டி
  வெப்பமூட்டுகிறது
  மின்சாரக்கட்டணம்!

உடலுக்கு நன்மை தரவில்லை, தீங்கு தான் என்றபோதும் நவீனம் என்ற பெயரில் எல்லோரும் பயன்படுத்தி வருகின்றோம். சுற்றுச்சூழல் மாசு மட்டுமன்றி, மின் கட்டணமும் ஏறி வருவதை சுட்டும் விதமாக வடித்த ஹைக்கூ நன்று. பாராட்டுக்கள்.

  மதுபாட்டில்
  நிரம்பி வழிகிறது
  விதவையின் கண்ணீர்!

இக்கவிதை படித்தவுடன் விதவைகளின் எண்ணிக்கையை/ விரிவாக்கம் செய்யுமிடம்/ மதுக்கடை ! என்ற எனது ஹைக்கூவும் நினைவிற்கு வந்தது.

  மதுக்கடை என்பது நாட்டிற்கு அவமானம்.  இன்று பெரியவர்கள் மட்டுமல்ல் பள்ளி மாணவர்களும் குடிக்கு அடிமையாகி வரும் அவலத்தைக் காண்கிறோம்.

  இந்திய ஏவுகணை
  விண்ணில் பறக்கிறது
  கலாமின் புகழ்!

விரைவில் சந்திராயன் 2 அனுப்ப இருப்பதாக விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் அறிவித்திருந்தார். இது போன்ற பல சாதனைகள் நிகழ்த்துவதற்கு முன்னோடியாக வழிகாட்டியாக இருந்தவர் மறைந்தும் மறையாத மாமனிதர் அப்துல் கலாம்.

  ஆழ்துளைக் கிணறு
  அதிகரிக்கிறது
  குழந்தைகளின் மரணம்!

இக்கருத்தைக் கருவாக வைத்து வந்த ‘அறம்’ திரைப்படத்தை நினைவூட்டியது. ஏவுகணைகள் ஏவிடும் நம்மால் ஆழ்குழாய் கிணறுகளில் விழுந்த குழந்தைகளை மீட்பதற்கு கருவி இல்லை என்பது வெட்கம். ஆழ்குழாய் கிணறுகளை குழந்தைகள் விழுந்து விடாதவாறு மூடி வைக்க வேண்டுமென்ற விழிப்புணர்வும் இல்லாதது சோகத்திற்கு வழிவகுக்கின்றது.

  பெண்கள் அழகு நிலையம்
  சற்று குறைகிறது
  அழகிய புருவங்கள்!

இன்று பெண்களில் பலர் அழகு நிலையம் சென்று புருவத்தின் அளவைக் குறைத்து வில் போன்று ஆக்கி வருகின்றனர். ஆனால் சிலருக்கோ இயற்கையாகவே புருவம் வில் போன்று அமைந்து விடுகின்றன. நாட்டுநடப்பை ஹைக்கூவில் பதிவு செய்துள்ளார்.

  ரேசன் அரிசி
  பெரிதாய் இருக்கிறது
  ஊழல்!

  ரேசன் அரிசி பெரிதாக இருப்பது மட்டுமல்ல, அளவு சரியாக இருப்பதில்லை. ஏனென்று கேட்டால் அரசியல்வாதி, அதிகாரிகள் கவனிப்பு என்கின்றனர்.  எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ரேசன்கடை ஊழல் குறைந்தபாடில்லை.

  எனக்கும் சேர்த்தே
  அவளே சுவாசிக்கிறாள்
  கருவை சுமக்கும் தாய்!

கருவறை உள்ள நடமாடும் கடவுள் தாய். அவளின் சிறப்பை உணர்த்திடும் ஹைக்கூ நன்று.

  ஆலய வழிபாடு
  அடித்து அனுப்புகிறது
  அடியவர்களுக்கு மொட்டை

சிறப்பு தரிசனச் சீட்டு, அர்ச்சகர் கவனிப்பு, ஆலயத்தில் விற்பனை என்று வரும் பக்தர்களின் பணத்தை பதம் பார்க்கும் விதத்தை உணர்த்திய ஹைக்கூ நன்று.

  என்னவோ தெரியவில்லை
  எப்போதும் சண்டையில்
  எதிர் வீடு!

  அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் அன்போடு பழகினால் சண்டை வருவதற்கு வாய்ப்பு இல்லை  பெரும்பாலானோர் எதிர்வீடுகளுடன் சண்டையிட்டுக் கொள்ளும் மனநிலையைப் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

  சம்பள உயர்வு
  மகிழ்ச்சி இல்லை
  விலைவாசி உயர்வு

விலைவாசியைக் கட்டுப்படுத்தத் தவறி விடுகின்றனர். நூல் ஆசிரியர் கவிஞர் தயாநிதிக்கு பாராட்டுக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *