ஹைக்கூ ஜப்பானிலிருந்து தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வடிவம். அளவில் சிறிது. ஆற்றலில் பெரிது. இன்று ஹைக்கூவை இணையத்தளம் மூலம் உலக அளவிற்குக் கொண்டு சென்றவர் ஹைக்கூவாளர் இரா. இரவி. ஹைக்கூ உலகின் தொடர் படைப்பாளி. கவிதை சாரல், ஹைக்கூ கவிதைகள், விழிகளில் ஹைக்கூ, உள்ளத்தில் ஹைக்கூ என்னும் நான்கு ஹைக்கூத் தொகுதிகளை தொடர்ந்து ஐந்தாவதாக தந்திருக்கும் ஹைக்கூத் தொகுதி ‘ நெஞ்சத்தில் ஹைக்கூ’. ஹைக்கூத் தொகுதியில் ஐந்தாவது எனினும் இரா. இரவி க்கு இது ஆறாவதே.

கேள்வி பிறந்தது
பயத்தில் மறந்தது
பிரம்புடன் ஆசிரியர்
என்பது அதிகாரத்துடன் கல்வி போதிக்கும் ஆசிரியருக்கு பிரம்படி. இதுவே தொகுப்பின் முதல் ஹைக்கூ. மிகச் சரியாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் வன்முறையற்ற கல்வியே அவசியம் என்றவர்
படிப்பு எதற்கு?
அடுப்பூதும் பெண்களுக்கு
செருப்பாலடி சொல்பவனை
என்னும் ஹைக்கூ மூலம் பெண்ணுக்குக் கல்வி அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.

ஹைக்கூவாளர் இரா. இரவியின் சிறப்பம்சம் சம்பவங்களை, செய்திகளை, நிகழ்வுகளை, நிஜங்களை உடனுக்குடன் ஹைக்கூ ஆக்குவது. அவ்வாறான ஹைக்கூக்கள்….
காற்றில் பறந்தது
காவல் துறை மானம்
ஜெயலட்சுமி சபலம்

சுனாமி பதித்தது கொடுமை
விவேக் ஓபராய் பதித்தது அருமை
அடையாளம்
கவிஞர் நேரிடையாகவே பெயரை பதிவு செய்து நிகழ்வை நினைவூட்டுகிறார். நல்லவையாயினும் அல்லவையாயினும் எடுத்துக் காட்ட வேண்டும் என்னும் தீவிர மனப்பான்மை மிக்கவராயுள்ளார். வெளிப்படையாகக் கூறுவது ஹைக்கூ பண்பல்ல.

தமிழ் செம்மொழியாக அறிவித்தது குறித்து பலருக்கு மகிழ்ச்சி. சிலருக்கு அதிர்ச்சி.
இன்பத் தேன்
பாய்ந்தது காதினிலே
செம்மொழி அறிவிப்பு
என மகிழ்வு கொள்கிறார் கவிஞர். முதல் இரண்டு வரிகள் இரவல். மூன்றாமடியும் அறிவிப்பே. இரண்டு அடிகளையும் இணைத்து ஒரு ஹைக்கூவாக்கியுள்ளார். கவிஞரின் தமிழ்ப்பற்றை வெளிப்படுத்தியுள்ளது என்பதே இதன் செய்தி. இரவல் வரிகளை எடுத்தாண்டதோடு கவிஞர் பழமொழிகளையும் முன்வைத்து சிலவற்றை உருவாக்கியுள்ளார்.
அகதி சொல்
அம்பலம் ஏறாது
இன்னலில் இலங்கைத் தமிழர்

அச்சாணி இல்லாத தேர்
முச்சாணும் ஓடாது
அச்சாணி என்னவள்

நுணல் வாயாற்
கெட்டாற் போல்
சில அரசியல்வாதிகள்

அத்திபூத்தாற் போல
சட்ட மன்றத் தேர்தல்
விரைவில் தேர்தல்

அஞ்சு மூன்றும் எட்டு
அத்தை மகளைக் கட்டு
குறைப்பிரசம்

அம்பெத்தெட்டு அரிவாள்
அறுக்க மாட்டாதவனிடம்
அதிகபட்ச மந்திரிகள்

ஊதி ஊதி
உள்ளதெல்லாம் பாழ்
மதவெறிப் பேச்சு

உப்பு இல்லா பண்டம்
குப்பையிலே அன்று
பத்தியம் இன்று

சும்மா ஆடாது
சோழியன் குடுமி
அருகில் தேர்தல்

தென்னைக்குத் தெரியாது
இளநீரின் சுவை
திறமையறியா இளைஞர்கள்

அளவிற்கு மிஞ்சினால்
அமுதம் மட்டுமல்ல
மழையும் விசம்
இவைகளில் எல்லாம் ஓர் அக்கறை இருக்கிறது. ஒரு கோபம் உள்ளது. எடுத்துக்காட்டவும் ஒரு நியாயமும் இருக்கிறது. ஆனால்
பிரகாசமாய் ஒளிர்ந்தது
அணையப் போகும் விளக்கு
எய்ட்ஸ் நோயாளி
என்பது பாதிக்கப்பட்டவரை புண்படுத்தும் செயல். எய்ட்ஸ் நோய் குணப்படுத்தக் கூடியது என்றும் எய்ட்ஸ் நோயாளிக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருவதற்கு எதிராக உள்ளது. எய்ட்ஸ் குறித்து எச்சரிக்கையாக ஒரு ஹைக்கூ எழுதியிருக்கலாம். பழமொழிகளை முன் வைத்து எழுதப் படுவதால் கவிஞரின் திறமை முழுமையாக வெளிப்படாமலே நின்று விடுகிறது.

நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு சென்றதில் அரசியலின் பங்கு அதிகம். அரசியல்வாதிகள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டுக் கொண்டு நாட்டை அழித்து வருகின்றனர். அரசியல்வாதிகளின் மீதான விமர்சனங்கள் அதிகமாகவே இருந்தும் பயனில்லை. கவிஞரும் தன் பங்குக்கு அதிகபட்சமாய் இத்தொகுப்பில் சாடியுள்ளார். கண்டித்துள்ளார்.
அகப்பட்டதை
சுருட்டப்பா ஆண்டியப்பா
அரசியல் வேதம்

அரசியல்வாதி அறிவிப்பு
அரசியலுக்கு முழுக்கு
தப்பித்தது நாடு

எறும்பு நுழைந்த
ஆனைக் காதாய்
அரசியல்வாதிகளால் நாடு

வேட்டியில் மட்டுமல்ல
மனதிலும் கறை
அரசியல்வாதிகள்

உரிமை சலுகையானது
மயக்கத்தில் மக்கள்
ஏமாற்று அரசியல்
ஓர் இந்தியக் குடிமகனின் கோபத்தின் வெளிப்பாடாகவேயுள்ளன இந்த ஹைக்கூக்கள். இன்று அமைந்துள்ள கூட்டணி ஆட்சியையும் கிண்டலடித்துள்ளார்.

அடிவயிற்றில்
நெருப்பு
கூட்டணி ஆட்சி

இணங்கினால் தித்திப்பு
பிணங்கினால் கசப்பு
அரசியல் கூட்டணி

உதட்டில் வெல்லம்
உள்ளத்தில் கள்ளம்
அரசியல் கூட்டணி
கூட்டணி என்றாலே குழப்பம்தான். பதவி என்னும் ஒன்றையே பின்பற்றி கட்சிகள் ஒட்டிக்கொண்டுள்ளன. ‘ கூட்டணிகளின்’ நிலையைக் கவிஞர் துல்லியமாய், துணிச்சலாய் எடுத்துக்காட்டியுள்ளார்.

ஒரு மனிதனுக்கு அன்னையும் தந்தையும் அவசியம். அவர்களே தெய்வம். ஆனால் கவிஞரோ
அப்பா வலக்கை
அம்மா இடக்கை
என இருவர் நிலையையும் எடுத்துக் காட்டி மூன்றாமடியில்
மனைவி இதயம்
என்கிறார். இதயம் இல்லாமல் மனிதன் இயங்க முடியாது. அதனால் மனைவியே முக்கியம் என்பது கவிஞரின் கருத்து. தொடர்ந்து
நினைத்தது கிடைக்கவில்லை
கிடைத்ததை நினை
மனைவி
என்கிறார். அடுத்து
இரவில் மட்டுமல்ல
பகலிலும் நேசியுங்கள்
மனைவியை
என்றும் அறிவுரைத்துள்ளார். கவிஞர் மனைவியை நேசிப்பதோடு ஒரு கணவன் எப்படியிருக்க வேண்டும் எனவும் உணர்த்துகிறார். கவிஞர் பெண்களை போற்றும் பண்பும் வெளிப்பட்டுள்ளது. இத்தொகுப்பு ஆணாதிக்கத்துக்கு எதிராகவும் குரல் எழுப்பியுள்ளது.

தாலி மெட்டி அடையாளம்
மணமான பெண்ணிற்கு
மணமான ஆணிற்கு?

பாட்டி தாத்தாவிற்கு
அம்மா அப்பாவிற்கு
தொடரும் பெண்ணடிமைத் தனம்

கணவனை இழந்தவள்
விதவை சரி
மனைவியை இழந்தவன்?

இட ஒதுக்கீடு இருக்கட்டும்
மனதில் தாருங்கள்
மகளிருக்குச் சம உரிமை

புதுமைப் பெண்ணே
அடித்து நொறுக்கு
ஆயிரம் காலத்து விலங்கு

மீசையோடு
சேர்ந்தே வளர்கிறது
ஆணாதிக்கம்

எழுத்திலும் அநீதி
ஆண் நெடில் தொடக்கம்
பெண் குறில் தொடக்கம்
இவைகளில் இறுதி ஹைக்கூவே முதன்மை.

சமூகத்தின் மீதும் மக்களின் மேலும் அக்கறையுள்ள ஒரு படைப்பாளன் அனைத்து இனத்துக்காகவும் படைப்பான். கவிஞர் இரா. இரவி தலித்தியருக்காகவும் சிலவற்றை படைத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டவன் விளைவித்த
பஞ்சில் உருவானது
அர்ச்சகர் பூனூல்

சாகவில்லை
சாதி வெறி
பாப்பாப்பட்டி கீரிப்பட்டி

தொட்டால் தீட்டு
தொட்டு சொன்னார்
தலித் விளைவித்த சோறு

எதிலும் கேட்கவில்லை
இதற்கு இணையாக
பறையொலி
தலித்தியருக்காக வக்காலத்து வாங்கியிருப்பினும் மதம், சாதி வேண்டாம் என்கிறார்.
உடன் பிறந்தே
கொல்லும் நோய்
சாதி வெறி.

கவிஞரின் ஹைக்கூ அறிவு பொதுத் தளத்திலேயே அதிகம் இயங்கியுள்ளது. புதியதாக சிலவற்றையே படைத்துள்ளார்.

அன்று பொய்
இன்று உண்மை
வெள்ளைக் காகம்

குருவிக் கூடு
பீரங்கியில்
நீடூழி வாழட்டும்
நல்ல ஹைக்கூ. அமைதியை விரும்பும் மனப்பான்மைக்குச் சான்று.

மரங்கள் வருந்தின
தோப்பு இரண்டானது
பாகப்பிரிவினை
மூலம் மனிதர்களை அஃறிணையாக்கியுள்ளார்.

பசியாறிய போதும்
உள்ளம் ஆறவில்லை
முதியோர் இல்லம்
என்பது நெகிழ்ச்சி.

வேரின் உழைப்பால்
கிளைகள் வளர்ச்சி
குழந்தைகள் மகிழ்ச்சி
இந்த ஹைக்கூ வாசிப்பவரையும்
மகிழ்ச்சியடையச் செய்கிறது. ஹைக்கூ பண்பு மிகுந்துள்ளது.

மழை இல்லை
குளத்தில் சலனம்
மீன்களின் சுவாசம்
மெல்லிய சலனத்தை ஏற்படுத்தியது.

தீபாவளிக்குத் தப்பி
ரம்ஜானுக்கு மாட்டியது
ஆடு
கவிஞரின் பரிதாப உணர்வுக்கு எடுத்துக் காட்டு. இவ்வாறு புதிய சிந்தனையுடன் புதிய பாடு பொருளுடன் இரவி அனைத்து ஹைக்கூக்களையும் படைத்திருந்தால் ‘ நெஞ்சத்தில் ஹைக்கூ’ வாசிப்பாளரின் நெஞ்சத்தை நிறைத்திருக்கும்.

கவிஞர் இரா. இரவியின் ‘ நெஞ்சத்தில் ஹைக்கூ’ என்னும் தொகுப்பில் 256 ஹைக்கூக்கள் உள்ளன. ஹைக்கூக்கள் என பெயரிட்டாலும் சென்ரியுவும் இடம் பெற்றுள்ளன. புதிர்த்தன்மையுடன் உள்ளன. விடுகதைப்பாணியும் இருக்கின்றன. கவிஞரின் மனித நேயம் ஹைக்கூக்களில் விரவிக் கிடக்கின்றன. நாடும் நாட்டவரும் நல்லா இருக்க வேண்டுமென்னும் எண்ணம் கவிஞருடமிருந்து ஹைக்கூக்களாக வெளிப் பட்டுள்ளன. இரா. இரவியின் ஹைக்கூக்கள் அனைத்து தரப்பினரின் குரலாய் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொருவரின் மனசாட்சியாய் பேசுகின்றன. நிறைய எழுதுவது இரவியின் பலம் எனில் அதுவே பலவீனமும் ஆகும். இந்தியன் என்பதை விட தமிழன் என்பதை விட மனிதன் என்பதே முக்கியம் என இத்தொகுப்பு சுட்டுகிறது. அழுத்தமான, ஆழமான, அளவான ஹைக்கூ படைக்கும் ஆற்றல் மிகுந்த இரா. இரவி தன் படைப்புகளில் கவனம் செலுத்தி புதுமையான பாடுபொருள்களில் பாட வேண்டும். அது கவிஞருக்கும் ஒரு புதிய அந்தஸ்தைப் பெற்றுத் தரும். ஹைக்கூ உலகிற்கும் புதியன கிடைக்கும். இவ்வாறு இயங்குவதன் மூலம் இரவி க்கு புதிய வாசகர்கள் கிடைப்பதை விட பழைய வாசகர்களை இழக்க நேரிடும். வாசக மனம் புதிதாய்த் தேடும். படைப்பாளிகளே வாசகன் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும். எனவே புதிய தளத்தில் புதிய சிந்தனையில் புதிய பாடுபொருளில் ஹைக்கூ படைத்திட வேண்டும். இரா. இரவியால் இயலும்.

நெஞ்சினில் தோன்றும்
நயாகராவை வென்றுவிடும்
கவிதை
என்றொரு ஹைக்கூ எழுதியுள்ளார். நெஞ்சத்தில் ஹைக்கூ காலத்தையும் வென்று நிற்க வாழ்த்துகள்.

வெளியீடு
ஜெயசித்ரா மதுரை

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *