சீர்காழி அருகே நத்தம் கிராமத்தின் நடுவே செல்லும் நான்கு வழி சாலை. இரு பகுதியாக பிரிக்கப்பட்ட கிராம மக்கள் சென்றுவர சுரங்க வழிப்பாதையும் சாலை மைய பிரிபானும் அமைக்க கோரிக்கை.

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை நான்கு வழி சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் முதல் தரங்கம்பாடி வரை சாலை அமைக்கும் பணிகள் இரவு பகலாக நடந்து வருகிறது. இந்நிலையில் சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட நத்தம் கிராமத்தை இரண்டாகப் பிரிக்கும் விதமாக நடுவே நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

நத்தம் கிராமத்தைச் சேர்ந்த இரு பகுதி மக்களும் அத்யாவசிய தேவைகளுக்கு இரண்டு புறமும் சென்று வர வேண்டிய நிலையில் நான்கு வழிச்சாலையை கடந்து ஆபத்தான முறையில் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சாலை பணிகள் துவங்கும்போதே தங்களுக்கு சுரங்கவழிப்பாதை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தி போராட்டம் நடந்து வந்த நிலையில் ஒவ்வொரு முறை போராட்டத்தின் போதும் அதிகாரிகள் சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதும் சுரங்கவழிப்பாதை அமைத்து தருவதாக உறுதி அளிப்பதும் வாடிக்கையாக இருந்து வந்தது.

இந்நிலையில் பெயரளவில் தரை மட்டத்தை விட மிகக் குறைந்த பள்ளத்தாக்கான பகுதியில் சிறிய சுரங்க வழி பாதையை அமைத்து மழைக்காலங்களில் தண்ணீர் வடிகால் ஆகவும் மற்ற காலங்களில் இரு பகுதி மக்கள் அதனை பயன்படுத்தி சென்று வர வேண்டும் என நான்கு வழிச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் அந்த பணிகளும் முறையாக நடைபெறாமல் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக பயனற்று கிடக்கிறது.. இரண்டு கிராம மக்களும் மேற்பகுதி வழியாக இருபுறமும் சென்று வருவதற்காக நான்கு வழிச்சாலையின் நடுவே மையப்பிரிப்பான் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான பணிகள் இதுவரை துவங்கப்படவில்லை. இந்நிலையில் முன்னறிவிப்பின்றி சாலை சோதனை முறையில் திறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த வாரம் இச்சாலையில் விளையாடிய எட்டாம் வகுப்பு மாணவர் ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் இரு பகுதி மக்களும் சென்று வருவதற்கு சுரங்க வழிப்பாதை முழுமையாக அமைத்து மேல் பகுதி நான்கு வழிச்சாலையிலும் வேகத்தடையுடன் கூடிய மையப் பிரிப்பான் தந்த பிறகே நான்கு வழிச்சாலையை பொது பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் மகாபாரதி சுரங்கவழிப்பாதையை விரைந்து முடித்து சாலை வசதி ஏற்படுத்த நான்கு வழிச்சாலை திகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதே நேரம் சோதனை அடிப்படையில் திறக்கப்பட்ட அன்றே விபத்தால் சாலை மீண்டும் மூடப்பட்டது. முழு பயன்பாட்டிற்கு திறக்கப்படாத நிலையில் தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் சுரங்கவழிப்பாதையும், மையப்பிரிப்பானும் அமைக்காமல் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தால் மிகப்பெரிய உயிரிழப்புகளை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இரு பகுதி கவலை தெரிவிக்கின்றனர்.எனவே தங்களுக்கு பாதுகாப்பான வழியை ஏற்படுத்தி தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *