வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் ரூபாய் ஒரு கோடியில் திருப்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பழமை மாறாமல் புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரலாற்று சிறப்பும், தொன்மையும் வாய்ந்த ஆலயங்கள், ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் பாடி புகழப்பட்ட ஆலயங்கள், பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்த ஆலயங்கள், கிராமப்புறங்களில் அமைந்துள்ள சிறு ஆலயங்கள் மற்றும் ஆதிதிராவிடர் வாழும் பகுதிகளில் உள்ள சிறு, சிறு ஆலயங்கள் ஆகிய பல்வேறு புனிதமான ஆலயங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

ஆலயங்களை திருப்பணி செய்து புதுப்பிக்கும் இன்றியமையாத பணியை பொதுமக்கள் அளிக்கும் நன்கொடை, ஆலயங்களின் சொந்த நிதி, நிதிமாற்றநிதி, அரசு மானியம், பொதுநல நிதி, ஆலய மேம்பாட்டு நிதி, கிராமப்புற ஆலயங்கள் திருப்பணி நிதி, ஆலயங்கள் திருப்பணி மற்றும் உபய திருப்பணி, நிதி ஆணைய மானியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வாழும் பகுதியில் அமைந்துள்ள கோயில்களுக்கான திருப்பணி நிதி, சுற்றுலாத்துறை நிதி ஆகிய நிதிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறை திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறையின் மூலம் பழமையான ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டு பழமை மாறாமல் புணரமைக்கும் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. வலங்கைமான் நகர் பகுதியில் உள்ள கோதண்டராமசாமி ஆலயம், ஐம்பெரும் சிவாலயங்களில் ஒன்றான விருப்பாச்சிபுரம் ஊராட்சியில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் மற்றும் சந்திரசேகரபுரம் சந்திரசேகர் சுவாமி ஆலயம் ஆகிய ஆலயங்களுக்கு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு நிர்வாக அனுமதி வழங்கப்பட்ட நிலையில் திருப்பணி வேலைகள் உபய திருப்பணியாக நடைபெற்று வருகிறது.

கிராம பணியாக வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள சித்தி விநாயகர் ஆலயம் ஆகியவை அரசு நிதியின் மூலம் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முன்னதாக திருப்பணிகள் நடைபெற்ற தொழுவூர் ஊராட்சியில் உள்ள பழனி ஆண்டவர் ஆலயம், சந்திரசேகரபுரம் ஊராட்சியில் உள்ள விஸ்வநாத சுவாமி ஆலயம் ஆகியவற்றில் குடமுழுக்கு விழா நடைபெற்று உள்ளது.

மேலும் ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் அடையாளம் காணப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கப்படும் நிலையில், திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அடுத்த மேல விடையில் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிராமத்தில் ஸ்ரீசிவசேகரி அம்பிகா சமேத ஸ்ரீ சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம் உள்ளது. சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயங்களில் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ருதுபரிகார ஸதலம் என அழைக்கப்படும் இந்த ஆலயம் அப்பர் சுவாமிகளால் பாடல் பெற்ற ஸதலமாகும்.

இந்த சுவர்ணபுரீஸ்வரர் ஆலயம் திருப்பணி இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் பொது நிதியிலிருந்து ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்பட உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *