சென்னை உள்நாட்டு முனையத்தில் முக்கிய பிரமுகர்கள் கேட்டில் 7அடி உயரமுடைய கண்ணாடி கதவு திடீரென நொறுங்கி உடைந்ததால் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வரை தொடர்ச்சியாக கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. உள்நாட்டு விமான முனையம் சர்வதேச முனையம் என்று மாறி மாறி கண்ணாடிகள் உடைந்து விழுவது வாடிக்கையாக இருந்து வந்தது. சுவர்களின் பதித்துள்ள கண்ணாடிகள், கண்ணாடி கதவுகள், மேற்கூறை பால் சீலிங்குகள், சுவர்களில் பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கற்கள் என்று மாறி மாறி விழுந்து, 90 முறைகளையும் தாண்டி விபத்துக்கள் நடந்தன. இதில் ஒரு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த விபத்துகளை தடுப்பது, சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு பெரும் சவாலாக விளங்கியது. சென்னை விமான நிலையம் என்றாலே கண்ணாடி உடைந்து விழும் விமான நிலையம் தானே என்று கேட்கும் அளவு இருந்தது.

அதன் பின்பு கடந்த 2 ஆண்டுகளாக கண்ணாடிகள் உடைந்து விழுவது நின்றது. விமான நிலைய அதிகாரிகளும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். ஆனாலும் கடந்த ஆண்டு ஒரு முறை சர்வதேச விமான நிலையத்தில் ஒரு பெரிய கண்ணாடி கதவு உடைந்து மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வருகை பகுதியில் 4வது கேட்டில் உள்ள சுமார் 7 அடி உயரம் உடைய கண்ணாடி கதவு திடீரென பயங்கர சத்தத்துடன் உடைந்து நொறுங்கியது. ஆனால் கண்ணாடி உறுதியானதாக இருந்ததால் சிதறி கீழே விழாமல், நொறுங்கி கதவிலேயே இருந்தது. ஆனாலும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினார்கள்.

நல்வாய்ப்பாக அந்த நான்காவது கேட்டில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் பயன்படுத்தாமல் மூடியே இருக்கும். வெளி மாநில கவர்னர்கள், வெளிநாட்டு தூதர்கள் போன்ற முக்கிய பிரமுகர்கள் செல்லும்போது மட்டும் கேட் திறக்கப்படும். ஆனால் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் இருப்பதால், அதைப்போன்ற சிறப்பு அனுமதி யாருக்கும் கிடையாது. எனவே கேட் எப்போதும் மூடியே இருந்தது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

ஆனாலும் இந்த தகவல் கேள்விப்பட்டு விமான நிலைய அதிகாரிகள் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடைந்த கண்ணாடி கதவை ஆய்வு செய்தனர். அதோடு உடைந்த அந்த கண்ணாடி கதவை அவசர அவசரமாக மாற்றி புதிய கண்ணாடி கதவை அமைத்துள்ளனர்.

ஆனாலும் சாதாரண பயணிகள் பயன்படுத்தாத, முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்தும் விஐபி கேட்டில் உள்ள கண்ணாடி கதவு உடைந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் கேட் எண் 2, அல்லது ஒன்றில், இதைப்போல் கண்ணாடி கதவு உடைந்து இருந்தால், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் போன்றோர்கள் பெரும் பாதிப்பு அடைந்திருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே இந்த கண்ணாடி கதவு எப்படி உடைந்தது என்பது குறித்து, விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரணை நடத்தி வருகின்றனர். கடுமையான கோடை வெப்பத்தில் கண்ணாடி மெல்ட் ஆகி உடைந்திருக்கலாம். அல்லது டிராலி இடித்ததில் உடைந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் உள்ள மற்ற கண்ணாடி கதவுகளையும், நிபுணர்கள் குழுவினர் முழுமையாக ஆய்வு செய்து, உறுதியில்லாமல் இருக்கும் பழைய கண்ணாடி கதவுகளை எடுத்துவிட்டு, புதிய கதவுகளை மாற்ற வேண்டும் என்று விமான நிலைய ஊழியர்கள் தரப்பில் கூறுகின்றனர். அதைப்போல் செய்யவில்லை என்றால், நிலையத்தில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்குவது மீண்டும் தொடர்ச்சியாக நடக்கத் தொடங்கும். அதனால் பயணிகள் விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் மீண்டும் அச்சம் பீதி ஏற்படும் என்று கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *