திருப்பூர் தாலுகா செய்தியாளர் சரவணகுமார்
திருப்பூர் மாவட்டம்,பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் – உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள நீர்நிலை முழுவதிலும் குப்பைகள்,கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். ஊருக்குள் இருக்கும் அனைத்துக் கழிவுகளையும் கொண்டு வந்து மேற்படி நீர் நிலைப்பாதையில் கொட்டி வருகிறார்கள்.
இதனால் அந்தப் பகுதி மிகவும் அசுத்தம் ஏற்பட்டு சுகாதாரக் கேடு நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் குப்பைகளை அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கரைப்புதுார் பஞ்சாயத்து நிர்வாகம்,உள்ளிட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது.ஆனால் இன்னும் அங்கு இன்னும் குப்பைகள் அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று குப்பை கொட்டுவதற்காக வந்த தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த டிராக்டரை பொதுமக்கள் சிறை பிடித்தனர். இதுகுறித்து டிராக்டரின் ஓட்டுனரிடம் கேட்டபோது குன்னாங்கல்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் இருந்து குப்பைகள் எடுத்து வரப்படுவதாக கூறினார்.
இதையடுத்து, பொதுமக்கள் டிராக்டர் ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர்.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஏற்கனவே குவிந்து கிடக்கும் குப்பைகளையே அகற்ற வழி இல்லாமல் கரைப்புதுார் ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு எப்போது அமல்படுத்தப்படும் என்று தெரியவில்லை. அடுத்தடுத்து குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்க கரைப்புதுார் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.