காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ்காந்தி உயிர்நீத்த இடத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது . வருடந்தோறும் இந்நாளில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஸ்ரீபெரும்புதூர் வந்து மலர் வளையம் வைத்து மவுன அஞ்சலி செலுத்தி பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொள்வது வழக்கம்
அந்த வகையில் அமரர் ராஜீவ் காந்தியின் 33 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு, எம்.பி., விஜய் வசந்த், சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவர் ராஜேஷ், முன்னாள் எம்.பி., கே.வி. தங்கபாலு உள்ளிட்ட சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மலர்வளையம் வைத்து மலர்தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து யாத்திரையாக கொண்டு வரப்பட்ட ராஜீவ்காந்தி நினைவு ஜோதியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பெற்றுக் கொண்டார். அதனை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மருத்துவ முகாமை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சியினர் அஞ்சலி செலுத்த வருவதால் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாமும், மகிளா காங்கிரஸ் சார்பில் நீர் மோர் பந்தலும் ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் அன்னதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.