தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் மேலமருதப்பபுரம் ஊராட்சி மற்றும் நல்லூர் ஊராட்சியில் பணிபுரிந்த மக்கள் நலப் பணியாளர்களின் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் மக்கள் நலப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் மேல மருதப்பபுரம் சுப்புலட்சுமி மற்றும் நல்லூர் சுந்தரி ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ( வ.ஊ) கணேசன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) மாரியப்பன் முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வே.புதியவன் அனைவரையும் வரவேற்று பேசினார். பணி நிறைவு பெற்ற சுப்புலட்சுமி , சுந்தரி ஆகியோருக்கு அனைவரும் கைத்தறி ஆடை அணிவித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர். ஆலங்குளம் ஒன்றிய மக்கள் நல பணியாளர் சங்கத்தின் சார்பில் பணி நிறைவு பெற்ற இருவருக்கும் தலா பத்தாயிரம் ரூபாய் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கந்தசாமி அலுவலக உதவியாளர் வெள்ளத்துரை, ஆலங்குளம் ஒன்றிய மக்கள் நலப் பணியாளர் சங்கத்தின் தலைவர் விஜயராம், செயலாளர் வேல்ராஜ், பொருளாளர் சுந்தரி, மக்கள் நலப் பணியாளர்கள் பட்டு, திராவிட மணி, அன்பழகன், பிரேமா, அமுதா, சகாயராஜ் , துரைச்சி, மதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் பணி நிறைவு பெற்ற மக்கள் நலப் பணியாளர்கள் சுப்புலெட்சுமி மற்றும் சுந்தரி ஆகியோர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.