ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் பகுதியில் வைக்கப்பட்ட பதாகையால் பரபரப்பு
இதுகுறித்து சமூக ஆர்வலர் கருப்பசாமி கூறுகையில்
சிறப்பு நிலை நகராட்சியாக இருந்து வரும் ராஜபாளையம் நகராட்சியை அருகிலுள்ள 13 கிராம ஊராட்சிகள் முழுவதும் 1 கிராம ஊராட்சியை பகுதியாகவும் இணைத்து ராஜபாளையம் மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. மக்கள் தொகை பெருக்கம் மற்றும் வருவாய் உயர்வு ஆகியவற்றை பொறுத்து ஊராட்சியானது பேரூராட்சியாகவும், பேரூராட்சியானது நகராட்சியாகவும், நகராட்சியானது மாநகராட்சியாகவும் தரம் உயர்த்தப்படுவது வழக்கமான நடைமுறைதான் என்றாலும் இரண்டாம் நிலை ஊராட்சிகளாக இருக்கக்கூடிய தளவாய்புரம், கிருஷ்ணாபுரம், சுந்தரநாச்சியார்புரம், கணபதி சுந்தரநாச்சியார்புரம் உள்ளிட்ட கிராம ஊராட்சிகள் எதன் அடிப்படையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது என்று கருத்துரு என்ற ஆய்வு அறிக்கையை வெளியிட கேட்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய கிராமங்கள் எல்லாம் விவசாயம் மற்றும் தையல் தொழிலே பிராதான தொழிலாக இருந்து வருகிறது. இரண்டாம் நிலை ஊராட்சிகளாக உள்ள இந்த ஊராட்சிகள் அடிப்படை வசதிகளில் இன்னும் தன்னிறைவு அடையவில்லை.
பொருளாதார ரீதியாகவும் மக்கள் மேம்பட்ட நிலையில் இல்லை. இந்த நிலையில் மேற்கூறிய ஊராட்சிகளை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்போது கீழ்கண்ட இன்னல்களுக்கு மக்கள் ஆளாக நேரிடும்…
1) ஊராட்சியின் வரி விதிப்பை விட கிட்டத்தட்ட 4 மடங்கு வரியை மக்கள் செலுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
ஏழை எளிய மக்கள் எவ்வாறு இந்த வரி உயர்வை சமாளிக்க முடியும்???
2)மாநகராட்சியாக தரம் உயரும் பட்சத்தில் எந்த ஒரு வேலைக்கு அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் சுமார் 11 கி.மீ தூரம் பயணிக்க வேண்டும். இது மக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தக்கூடும்.
3)இரண்டாம்நிலை கிராம ஊராட்சிகளாக இருந்த போதிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பயன்பெறும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக நேரிடும்.
இரண்டாம் நிலை ஊராட்சியில் இருந்து பேரூராட்சியாகவும் பேரூராட்சியிலிருந்து நகராட்சியாகவும் நகராட்சியிலிருந்து மாநகராட்சியாகவும் படிப்படியாக தரம் உயர்த்தாமல் ஊராட்சிகளை நேரடியாக மாநகராட்சியாக தரம் உயர்த்துவது என்பது ஏழை எளிய மக்களுக்கு செய்யக்கூடிய துரோகம் ஆகும். தற்போதுள்ள விலைவாசி உயர்வின் காரணமாக சிரமத்திலிருக்கும் மக்களை மேலும் சிரமப்படுத்தும் திட்டத்தை ஒரு போதும் அனுமதிக்க முடியாது.
சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் மாநகராட்சியாக தரம் உயர்த்தும் இந்த திட்டத்தை கைவிடும் வரை அறவழியில் சட்டத்திற்குட்பட்டு மக்களை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது