புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்டம், வடக்கு வரிச்சிக்குடி கிராமத்தில் இயற்கை விவசாயி திரு. பாஸ்கர் அவர்கள், தனது ஐந்து ஏக்கர் வயலில் 1200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு, பராமரித்து, பாதுகாத்து, அடுத்த ஆண்டிற்கான விதை உற்பத்தி செய்து வருகிறார்.
இத்தகைய பாரம்பரிய நெல் ரகங்களின் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டை அறியும் நோக்கில் நேற்று (07.01.2026) பஜன்கோவா வேளாண் கல்லூரியின் இணைப் பேராசிரியரும், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் நிரல் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் எஸ். ஆனந்த்குமார் அவர்களின் ஒருங்கிணைப்பில், வேளாண் இளங்கலைப் பட்டப்படிப்பில் நான்காம் ஆண்டு பயிலும் 29 மாணவ, மாணவிகள் களப்பயிற்சி மேற்கொண்டனர்.
இந்தக் களப்பயிற்சியின் போது, மாணவ, மாணவிகள் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் உருவியல் பண்புகளான நெற்கதிரின் நிறம் மற்றும் வடிவம், தூர்களின் எண்ணிக்கை, இலையின் மேல் காணப்படும் மென்மயிரிழைகள், நெல்மணிகளின் மேல் உள்ள வால் பகுதி உள்ளிட்ட பாரம்பரிய நெல் ரகங்களுக்கே உரிய தனித்துவமான பண்புகளை நேரடியாகக் கண்டறிந்து ஆவணப்படுத்தினர்.
மேலும், பருவநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய பாரம்பரிய நெல் ரகங்கள், அவற்றின் மருத்துவப் பண்புகள் மற்றும் பயன்பாடுகள் குறித்து கல்லூரி இணைப் பேராசிரியர் முனைவர் எஸ். ஆனந்த்குமார் அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு விரிவாக விளக்கினார்.
முன்னதாக, அந்த கிராமத்தில் களப்பணியாற்றி வரும் மாணவி சிவசக்தி அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவி சரோஷினி, 1200 பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்து வரும் விவசாயி திரு. பாஸ்கர் அவர்களின் அரிய மற்றும் மதிப்புமிக்க சேவையை அங்கீகரிக்கும் விதமாக, அவர் “மரபணுக் காவலன்”-“நெற்பயிர் காதலன்” போன்ற சிறப்புப் பெயர்களுக்கு முழுமையாக பொருத்தமானவர் எனக் குறிப்பிட்டு நன்றியுரை வழங்கினார்.