தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ.லியோ யாக்கோப் ராஜ்.
தஞ்சாவூர்,ஜூன்-15. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் ரேசன் கடைகளில் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுவதில்லை, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட தஞ்சாவூர் ஒன்றிய குழு கூட்டம் இன்று காலை தஞ்சாவூர் கீழ ராஜவீதி கட்சி அலுவலகத்தில் ஒன்றிய பொறுப்பாளர்.ஜி.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற பாமாயில், பருப்பு, கோதுமை, மண்ணெண்ணெய், ஆகிய பொருட்கள் தொடர்ச்சியாக, முறையாக வழங்கப்படுவதில்லை. இதில் அரிசி தவிர்த்து பருப்பு, கோதுமை முற்றிலும் வழங்கப்படுவதில்லை. மண்ணெண்ணெய் குறைத்து வழங்கப்படுகிறது. பல சமயங்களில் அதுவும் வழங்கப்படுவதில்லை. வட்ட வழங்க அலுவலக அதிகாரிகள் கடைகளில் முறையாக பொருட்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறதா என ஆய்வுகள் மேற்கொள்வதில்லை. உடனடியாக மாவட்ட ஆட்சியர் தலையிட்டு ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்க இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
கடந்த ஆண்டு பருவத்தில் குருவை,சம்பா சாகுபடிகள் பாதித்துள்ள நிலையில், விவசாய வேலைகள் எதுவும் இன்றி விவசாயத் தொழிலாளர்கள் ஆறு மாத காலமாக வேலையில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மகாத்மா காந்திதேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் முன் வரவேண்டும், தற்போது பள்ளிகள் திறந்து மாணவ, மாணவிகள் தங்கள் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு வந்து செல்கின்றனர்.
அடுத்தபடியாக கல்லூரிகளும் திறக்கப்படுவதால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் எண்ணிக்கை அதிகமாகிறது .
இவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கல்வி நிலையங்களுக்கு சென்று வர போதுமான பேருந்து வசதிகள் இல்லை, கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகம் மாணவ மாணவிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக போதிய பேருந்துகள் ஏற்பாடு செய்து தர இக்கூட்டம் கேட்டுக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் வீரமோகன் அரசியல் நிலைகள் குறித்தும், ஒன்றிய பொறுப்பாளரும், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான வெ.சேவையா நடைபெற்ற பணிகள் குறித்தும் பேசினார்கள். கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் பி.குணசேகரன், நிர்வாகிகள் சீதாராமன், எம் சொக்கலிங்கம், ஜான் பீட்டர், எம். மல்லிகா, எ.சிவகாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.