காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால் தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிராம மக்களின் போராட்டம் 690 வது நாளை எட்டியுள்ளது. இது போக கிராம மக்கள் கிராம சபை கூட்டங்களில் விமான நிலையம் தேவை இல்லை என்ற தீர்மானங்களை நிறைவேற்றினர். இதனைத் தொடர்ந்து கிராம சபைகளில் தீர்மானம் நிறைவேற்றியும் நடவடிக்கை இல்லாததால் கிராம சபை புறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதேபோன்று சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலையும் புறக்கணித்து ஏகனாபுரம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிராம மக்களின் போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தொடரும் நில எடுப்பு அறிவிப்புகள்
இதனிடையே முதற்கட்டமாக பொடாவூர்,மகாதேவி மங்கலம்,சிறுவள்ளூர், பரந்தூர் கிராமத்தில் விமான நிலையத்துக்கான நிலங்களை கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருப்பவர்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தேர்தல் முடிவு பெற்று தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு மீண்டும் நிலம் எடுப்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தொழில் முதலீடு ஊட்டுவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், புதிய பசுமை வெளி விமான நிலையம் திட்டம் அமைப்பதற்கான நில எடுப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எடையார்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சுமார் 59.75 எக்டர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்றைய தினம் கூட வளத்தூர் பகுதியில் நிலம் எடுப்பதற்கான ஆட்சி பணி ஆணை வெளியிடப்பட்டு இருந்தது.

இதனால் தொடர்ந்து நிலை எடுப்பு குறித்து தகவல் வருவதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் வருகின்ற 24-ஆம் தேதி திங்கட்கிழமை அன்று, கிராம மக்களின் போராட்டம் 700-வது நாளை எட்ட உள்ள நிலையில் , ஆந்திராவில் தஞ்சமடைய சித்தூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களின் இந்த முடிவு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *