கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த குடிமேனஹள்ளி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவில், காளியம்மன் கோவில், பட்டாளம்மன் கோவில் மற்றும் ஓம்சக்தி கோவில் ஆகியவை அடுத்தடுத்து அமையப்பெற்றுள்ளன.
வாரந்தோரும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நிலையில் நேற்று இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் நான்கு கோவில்களில் அம்மன் கழுத்தில் இருந்த தாலிகள், அம்மன் மடியில் வைத்திருந்த பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
இன்று பட்டாளம்மன் கோவில் பூசாரி குமரவேல் கோவிலுக்கு வந்து பார்த்தபோது அனைத்து கோவில்களிலும் உள்ள பூட்டுகள் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து ஊர் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஊர் மக்கள் சென்று பார்த்தபோது, தாலிகள் மற்றும் மடியிலிருந்த பணம் திருடப்பட்டது தெரிய வந்தது. அனைத்து தாலிகளும் சேர்த்து சுமார் 4.5 சவரன் தங்கம் இருக்குமென கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து பாரூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.