குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த மாரியப்பன் அவர்களின் இல்லத்திற்கு திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி சென்று அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி அரசின் நிதியுதவி வழங்கினர்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், கோவில்பட்டி நகரசபை தலைவர் கருணாநிதி ஆகியோர் உடனிருந்தனர்.

கோவில்பட்டி அருகே வானரமுட்டி கிராமத்தைச் சேர்ந்த வீராசாமி மகன் மாரியப்பன் (41). இவர் கடந்த 20 ஆண்டுகளாக குவைத் நாட்டில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இவர் குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் அவரது நிறுவனம் ஒதுக்கித் தந்த அறையில் தங்கியிருந்து வேலைக்குச் சென்று வந்தார்.

இந்நிலையில், அந்த அடுக்குமாடி குடியிருப்பில் புதன்கிழமை அதிகாலை 6-வது மாடியில் உள்ள வீட்டின் சமையலறையில் திடீரென தீப்பிடித்தது. இதனால் பெரும் புகை ஏற்பட்டு குடியிருப்பின் பிற பகுதிகளுக்கும் பரவியது.இந்த தீ விபத்தில் சிக்கி கோவில்பட்டி அருகே வானரமுட்டியைச் சேர்ந்த மாரியப்பன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *