வலங்கைமான் ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 16,200 மாடுகளில், இதுவரை 12,100 மாடுகளுக்கு (75%) கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று திருவாரூர் கோட்ட உதவி இயக்குனர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் கடந்த 10- ஆம் தேதி துவங்கிய 21 நாட்கள் நடைபெற்று வரும் கோமாரி தடுப்பூசி முகாமில், ஆவூர் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட ஏரி வேளூர் பகுதியில் 300 மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மாவட்ட கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் மருத்துவர் ஹமீது அலி மற்றும் உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் ஆலோசனைப்படி, ஆவூர் மற்றும் மணக்குண்டு கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட ஏரி வேளூர் கிராமத்தில், தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ் 5-வது சுற்று கோமாரி தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 300 க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு கோமாரி நோய் நோய் தடுப்பூசி போடப்பட்டது.
முகாமை திருவாரூர் கோட்ட உதவி இயக்குனர் மருத்துவர் ஈஸ்வரன் மற்றும் திருவாரூர் கால்நடை நோய் புலனாய்வு துறை உதவி இயக்குனர் மருத்துவர் சுப்பிரமணி ஆகியோர் துவக்கி வைத்து ஆலோசனை வழங்கினார். கால்நடை உதவி மருத்துவர் கலையரசி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் மாரியப்பன் ஆகியோர் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தினர்.