கோவை மாவட்டம் பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் ஆண்டுவிழா, நூல்வெளியீடு, தூயதமிழ்க் கருத்தரங்கம், தூயதமிழ்ச் சொல்லரங்கம் மற்றும் சாதனையாளரக்குப் பாராட்டு விழா என ஐம்பெரும்விழாவாக நடைபெற்றது.

தொடக்க விழாவில் பாசறையின் நிறுவுநர் தலைவர் தமிழ் மணிகண்டன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். விழாவிற்கு தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர்.சி சுப்பிரமணியம் அவர்கள் தலைமையற்றுப் பேசுகையில் அடுத்தத் தலைமுறைக்கு நம் தமிழை பிறமொழிக் கலப்பின்றித் தனித்தமிழாக எடுத்துச் செல்லும் பெரும் பணியை மேற்கொண்டுள்ள தூயதமிழ் இளைஞர் பாசறையின் செயல்பாடுகள் வரலாற்றில் பதிவாகும் என்று வாழ்த்தினார்.

நற்றமிழ் செ.வ.இராமாநுசன் அவர்கள் தொடக்கவுரை ஆற்றினார். மோகனபூபதி ஆண்டறிக்கை வாசித்தார். தொடர்ந்து, முதலாம் அமர்வில் நோய் நல்லது நூல் வெளியீடு நடைபெற்றது. புவனேசுவர் தமிழ்ச் சங்கத் தலைவரும் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கப் பேரவையின் தலைவருமான செ.துரைசாமி அவர்கள் நோய் நல்லது எனும் நூலை வெளியிட உலகத் தமிழ் நெறிக்கழகத்தின் செயலர் சிவலிங்கம் மற்றும் ஜெ எஸ் எஸ் இயற்கை மருத்துவக் கல்லூரியின் முதல்வர் திலீப் அவர்களும் நூலைப் பெற்றுக் கொண்டனர்.
பேராசிரியர் விஜயகுமார் நூலுக்கு மதிப்புரை வழங்கினார். நூலாசிரியர் இலக்கியவாணன் ஏற்புரை ஆற்றினார். தொடர்ந்து இரண்டாம் அமர்வில் உலக சாதனை படைத்த பாவலர் கதிர்வேல் அவர்களுக்கு பாசறையின் மூலம் சந்தன மாலை அணிவித்து பாராட்டிச் சிறப்பிக்கப்பட்டது.
மூன்றாம் அமர்வில் நடைபெற்ற தூயதமிழ்க் கருத்தரங்கில் சு.சதீஷ்குமார், ஆஷா களஞ்சியம் மற்றும் த.தங்கமுத்து ஆகியோர் மிகச்சிறப்பாக கருத்துரை ஆற்றினர்.
தூயதமிழ்ச் சொல்லரங்கில் க.முத்து விக்னேஷ் மற்றும் ச.ஜீவதர்ஷினி சிறப்பாகப் பேசினர். தமிழகத்தின் 13 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து இளைஞர்கள் பிறமொழிக் கலப்பின்றி தூயதமிழில் உரையாற்றினர்.
நிறைவு விழாவில் தூயதமிழ் இளைஞர் பாசறையின் மூலம் கோவையில் உள்ள 40க்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் அனைத்து அமைப்பின் நிர்வாகிகளுக்கும் மேடையில் தமிழ் மணிகண்டன் சிறப்புச் செய்தார். சிவராமகிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.
ஆண்டுவிழாவில் கலாவதி சிவராமகிருஷ்ணன், பொன்கி பெருமாள், ந.கணேசன், தனபால், இரவீந்திரன், அப்பாவு காளியப்பன் உள்ளிட்ட
தமிழ் அறிஞர்கள், தமிழ் ஈடுபாட்டாளர்கள் பேராசிரியர்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் கலைஞர்கள் என 250க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
அனைவருக்கும் நண்பகல் உணவு வழங்கப்பட்டது. விழாவிற்கு சப்பான், இலண்டன், கொரியா, போன்ற நாடுகளிலிருந்து உலகளாவிய தமிழ் அறிஞர்கள் வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தனர். விழாவினை ஜெயஸ்ரீ தொகுத்து வழங்கினார். பார்த்தசாரதி அமர்வுகளை ஒருங்கிணைத்தார்.