விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரின் மையப்பகுதியில் முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி. எஸ். குமாரசாமி ராஜா பெயரில் அரசு மகப்பேறு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இம் மருத்துவ மனைக்கு தினசரி அதிகமான எண்ணிக்கையில் பிரசவம் பார்ப்பதற்கு மற்றும் சிகிச்சை எடுப்பதற்கு பெண்கள், குழந்தைகள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு பிரசவம் பார்க்க வரும் பெண்களுக்கான பாதுகாப்பாளர்கள் தங்குவதற்கான அறை ஒன்று ராஜபாளையம் நகராட்சி சார்பில் 2017 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
இந்த அறை கட்டியது முதல் திறந்து செயல்பாட்டிற்கு வராமல் பூட்டப்பட்டே கிடக்கிறது. இதன் காரணமாக கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பாக வரும் அவர்களது தாய்மார்கள் மற்றும் உறவினர்கள், குழந்தைகள் கடும் வெயில் மற்றும் மழையில் நனைந்தபடியே காத்து கிடக்கும் அவலம் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து அரசு மருத்துவ தலைமை மருத்துவர் டாக்டர் மாரியப்பனிடம் கேட்டபோது, “இக்கட்டிடம் முழுக்க முழுக்க ராஜபாளையம் நகராட்சி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், தங்களிடம் ஒப்படைத்தால் உடனடியாக திறக்கப்பட்டு பாதுகாவலர்களுக்கான தங்கும் அறை, சகல வசதிகளுடன் செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.
இது குறித்து ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நாகராஜனிடம் கேட்டபோது, “இதற்கான கழிவு நீர் செல்லும் பாதை சரியாக அமைக்கப்படாததால் இது கடந்த ஆறு வருடங்களுக்கு மேலாக திறக்கப்படாமல் உள்ளதாகவும், இன்னும் ஓரிரு தினங்களுக்குள் அவை சரி செய்யப்பட்டு, திறக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் என்று உறுதியளித்தார். எப்படியாக இருந்தாலும் சரி. கர்ப்பிணி பெண்களை பாதுகாப்பாக கொண்டு வரும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாகும்.