வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 50,000 நிலையான வைப்புத் தொகை ரசீதை வலங்கைமான் ஒன்றிய குழுத் தலைவர் குமாரமங்கலம் சங்கர் பயனாளிகளுக்கு வழங்கினார்.
ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை மட்டுமே பிறந்திருப்பின், அப்பெண் குழந்தையின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான ரூபாய் 50,000 தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த வைப்புத் தொகை ரசீது நகல் பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. அதேபோன்று மற்றொரு திட்டத்தின் வாயிலாக ஒரு குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டுமே பிறந்து இருப்பின், அப்பெண் குழந்தைகளின் பெயரில் நிலையான வைப்புத் தொகையான தலா ரூபாய் 25 ஆயிரம் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தில் முதலீடு செய்யப்படுகிறது.
இந்த வைப்புத் தொகை ரசீது நகல் பெண் குழந்தைகளின் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. மேற்கூறிய வைப்புத் தொகை ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு, 18 வயது நிறைவடைந்த உடன், வட்டியுடன் சேர்த்து முதிர்வுத் தொகை பெண் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.
இந்தப் பலனைப் பெற, பெண் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு முதிர்வுத் தொகையானது பெண் குழந்தைகளின் உயர்கல்வியைத் தொடர உதவும். பெண் குழந்தைகளுக்கு கல்விச் செலவுகளை ஈடுகட்ட ஆறாவது ஆண்டு முதல் ஆண்டு ஊக்கத் தொகை யாக ரூபாய் 1,800 வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்காக ஆண்டு வருமான வரம்பு ரூபாய் 72,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெற்றோரில் ஒருவர் கருத்தடை அறுவை சிகிச்சை செய்யும் வயது உச்சவரம்பு 40 வயதாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா தலைமையில் இரட்டைப் பெண் குழந்தைகளுக்கான நிரந்தர வைப்புத் தொகை ரசீது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வலங்கைமான் ஒன்றிய விரிவாக்க அலுவலர் ஜோதி வரவேற்றார். நிகழ்ச்சியில் 10 பயனாளிகளுக்கு தலா ரூபாய் 50 ஆயிரத்துக்கான நிரந்தர வைப்புத் தொகை ரசீதை வலங்கைமான் ஒன்றிய குழுத் தலைவர் குமாரமங்கலம் சங்கர் வழங்கினார்.
இதில் ஒன்றிய குழு உறுப்பினர் பிரபாகரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிங்காரவேலு, பிரபு, கார்த்திக் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.