நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வருவாய் துறையினருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 130 ஆண்டு காலமாக மெட்ராஸ் ரேஸ் கிளப் என்ற தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து குதிரை பந்தயங்களை பல ஆண்டுகளாக நடத்தி வந்தது. இந்நிலையில் மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் அரசுக்கு செலுத்த வேண்டிய குத்தகை தொகையை கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கட்டாமல் இருந்து வந்தது.
இதுவரை 822 கோடி அளவில் குத்தகை தொகை நிலுவையில் வைத்துள்ளது மெட்ராஸ் ரேஸ் கிளப். கடந்த பல ஆண்டுகளாக குத்தகை செலுத்தாத நிலையில், அதை வசூலிக்கும் முயற்சியில் அரசு சார்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குத்தகை விவகாரம் தொடர்பாக அரசுக்கு எதிராக மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் 21 ஆம் தேதி மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு வருவாய் துறையினர் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். ஆனால் அந்த நோட்டீசுக்கு மெட்ராஸ் கிளப் நிர்வாகம் எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதையடுத்து, மெட்ராஸ் ரேஸ் கிளப் நிறுவனம், குத்தகை பாக்கியை அரசுக்கு உடனே செலுத்த வேண்டும் என்றும், குத்தகை பாக்கியை செலுத்த தவறும் பட்சத்தில் அதனை கையகப்படுத்தி அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஊட்டி மெட்ராஸ் ரேஸ் கிளப்பிற்கு சீல்: வருவாய் கோட்டாட்சியர் மகாராஜ் தலைமையில் காவல்துறையினர் உதவியுடன் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்த நிலத்தினை மீட்டு அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து அங்கிருந்த கட்டிடங்களுக்கு சீல் வைத்தனர்.
ஊட்டி குதிரை பந்தய மைதானம் வருவாய் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள நிலையில் தோட்டக்கலை துறையிடம் ஒப்படைக்கப்பட்டு அங்கு சுற்றுச்சூழல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டு தற்போது தோட்டக்கலைத்துறை ஊழியர்கள் பூங்கா அமைப்பதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.மீட்கப்பட்ட குதிரை பந்தய மைதானத்தில் பிரமாண்ட சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இந்த பணியில் தாவரவியல் பூங்காவை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.