நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்
மாவட்ட ஆட்சித்தலைவர்
மருத்துவர் ச.உமா, விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் நாமக்கல் மாவட்டத்திலுள்ள 116 நீர்நிலைகளில் இலவசமாக வண்டல் மண் எடுக்கும் திட்டத்தின் இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று (8.7.2024) தலைமைச் செயலகத்தில், 10 விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்களுக்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி ஆணைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 12.06.2024 அன்று நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரி / குளம் / கண்மாய்களில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை விவசாய பெருமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்பவர்கள் விவசாய பயன்பாட்டிற்கும் மற்றும் மண்பாண்டம் செய்வதற்கும் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம் என்றும், இதன்மூலம் இவர்கள் பயன்பெறுவதோடு, ஏரி / குளம் மற்றும் கண்மாய்கள் ஆழப்படுத்தப்பட்டு அதிக மழை நீரைச் சேமித்திட இத்திட்டம் உதவும் என்றும் அறிவித்தார்கள்.
இத்திட்டத்தினை எளிமையாக செயல்படுத்திட, இணையதளம் (tnesevai.tn.gov.in) மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, சரிபார்க்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்களுக்கு பதிலாக வட்டாட்சியர்களால் அனுமதி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், பயனாளிகள் தங்களது கிராமத்தில் அமைந்துள்ள நீர்நிலைகள் உட்பட அவர்கள் சேர்ந்த வட்டத்தில் அமைந்துள்ள நீர்நிலைகளிலும் வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை எடுத்துச் செல்லலாம்.
நீர்வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயற்பொறியாளர்கள், புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் / உதவி இயக்குநர், வட்டாட்சியர்கள், கிராம நிருவாக அலுவலர்கள் மற்றும் ஏரி, குளம் மற்றும் கண்மாய் பொறுப்பாளர்களுக்கு இத்திட்டத்தினை செயல்படுத்திட வழிகாட்டும் நெறிமுறைகள் இயற்கை வளங்கள் துறையால் 25.06.2024 அன்று வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா நாமக்கல் மாவட்டத்திலுள்ள 116 நீர்நிலைகளில் விவசாயிகள் மற்றும் மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக வண்டல் மண் எடுக்க பதிவு செய்திட tnesevai.tn.gov.in என்ற இணைய வழி சேவையை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ச.பிரபாகரன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் பார்த்தீபன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ரவிச்சந்திரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வார் பாதுகாப்பு அலுவலர் த.முத்துராமலிங்கம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.