எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டி மகாராஜபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான இடத்தில் 45 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குடிசை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் நேரடி விசாரணை நடத்த கோரிக்கை.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஆலங்காடு ஊராட்சியை சேர்ந்த ஏகோஜி மகாராஜபுரம் கிராமம் உள்ளது. இங்கு 45க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்களை சேர்ந்தவர்கள் உறவினர் வீடுகளில் சொந்த மனைபட்டா இல்லாமல் சிரமத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தைச் சேர்ந்த கலியன் மற்றும் சேட்டு ஆகிய இருவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு விண்ணப்பம் செய்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி அங்கு அரசுக்கு சொந்தமான இடம் என்று கூறப்படும் 3.5 ஏக்கர் பரப்பளவு ள்ள நிலத்தில் 30 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வந்து குடிசைகளை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் உத்தரவின் பேரில் வருவாய் அதிகாரிகள் மற்றும் புதுப்பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடிசைகள் அமைக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர்.இதனால் குடிசை அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் திரும்பிச் சென்றனர்.
இந்நிலையில் தாங்கள் வசிப்பதற்கு சொந்த வீட்டுமனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வரும் ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த 45 குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் 45 குடிசைகளை அமைத்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மனைப் பட்டா இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி இங்கு குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்ந்து அனைவருக்கும் மனை பட்டா வழங்கும் வரை இங்கேயே தங்கி இங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்