இளம் தலைமுறை மாணவர்கள் கழிவு மேலாண்மை குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் கோவை பி.எஸ்.ஜி.ஆர்.கிருஷ்ணம்மாள் கல்லூரி மற்றும் ராக் அமைப்பினர் இணைந்து் எனது குப்பை எனது பொறுப்பு எனும் குப்பை மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
முன்னதாக இதன் துவக்க விழாவில், கல்லூரி முதல்வர் முனைவர் ஹாரத்தி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசிய அவர், கோவை மாநகரை குப்பையில்லா மாநகரமாக மாற்றுவதில் நம் ஒவ்வொருவரின் பங்கும் இன்றியமையாதது எனவும், நாம் இணைந்து செயல்படுவதன் மூலம் நமக்கிடையே ஒரு சமூக உணர்வும் நல்லிணக்கமும் ஏற்படும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் ராக் ஐ.டி.சி.வாவ் (RAAC ITC WOW) அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பந்தாரி கலந்து கொண்டு மாணவிகளிடையே குப்பைகளை தரம் பிரிப்பதால் உள்ள பயன்கள்,திட,திரவ,வளம் மேலாண்மை குறித்து பேசினார்.
எனது குப்பை எனது பொறுப்பு என்ற தலைப்பில் பேசிய அவர் நாம் ஒவ்வொருவரும் எவ்வாறு குப்பையில்லா மாநகரத்தை உருவாக்குவதில் பங்கேற்கலாம் எனவும் கழிவு மேலாண்மை குறித்த தகவல்களையும் பிளாஸ்டிக் குப்பைகளினால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் இளம் மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்
இதன் தொடர்ச்சியாக பங்கேற்ற மாணவர்களுக்கு எவ்வாறு வீட்டிலேயே காய்கறி கழிவுகளை கொண்டு உரம் தயாரிப்பது மேலும் குப்பைகளைக் கொண்டு பொருட்கள் தயாரித்து குப்பைகளை மறுசுழற்சி செய்யலாம் என்பது குறித்தும் நடைமுறை பயிற்சி அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கழிவுகளை உபயோகமுள்ள பொருட்களாக மாற்றுவது குறித்து கண்காட்சி நடைபெற்றது.
வீட்டுக்கு கழிவுகளை குறைப்பது மற்றும் நிலையான வாழ்வியலுக்கான வழிமுறைகள் குறித்து பல்வேறு மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
கிருஷ்ணம்மாள் கல்லூரியின் சுற்றுச்சூழல் கண்காணிப்பு சங்கமும் RAAC-ம் இணைந்து நடத்திய இந்நிகழ்வில் சுமார் 5000 பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.