தமிழகத்திலிருந்து கேரளாவிற்கு கனிம வளம் கொண்டு செல்லப்படுவதை தடுக்க கோரி தென்காசியில் நேற்று போராட்டம் நடத்த இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவிய நிலையில் நேற்று தென்காசி மாவட்டம் முழுவதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் .
மேலும் அந்த போராட்டத்தை தடுக்கும் வகையில் மூன்று பேர் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர்.மேலும் 25 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மூலம் கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து தென்காசியில் நேற்று இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து மாபெரும் அறப்பழி போராட்டம் நடத்தப் போவதாகவும் இந்தப் போராட்டத்திற்கு தென்காசி பகுதி மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் ஆதரவை அளிக்க வேண்டும் என்றும் இந்த போராட்டத்தில் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாணவர்கள் தங்களது சீருடையுடன் வருவது இன்னும் சிறப்பு என்றும் இந்த தகவலை அனைவருக்கும் பகிருங்கள் அமைதியை விட சிறந்த ஆயுதம் எதுவுமில்லை அறவழியில் போராட்டம் செய்து வெற்றி காண்போம் வாருங்கள் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
அதனைத் தொடர்ந்து தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் தென்காசியில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது
ஆனால் இதுவரை முறைப்படி யாரும் காவல் துறையிடம் அனுமதி பெறவில்லை காவல்துறையிடம் உரிய அனுமதி பெறாமல் போராட்டம் நடத்துவது சட்டப்படி குற்றமாகும் .எனவே இதனை மீறி போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் சட்டப்படி கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கும் வகையில் அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் நேற்று காலை முதல் தென்காசியில் வாய்க்கால் பாலம் பொருட்காட்சி திடல், ஆயிரப்பேரி விலக்கு, யாணைப்பாலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டு இருந்தனர். தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் தென்காசி மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் அந்த பகுதியில் நடமாடிய 25க்கும் மேற்பட்ட இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் கனிம வளக் கடத்தல் சம்பந்தமாக இதுவரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த முக்கிய தலைவர்கள் மூன்று பேர்களை போலீசார் நேற்று காலை முதல் மாலை வரை வீட்டு காவலில் வைத்திருந்ததாகவும் தெரிகிறது.
இந்தச் சம்பவத்தால் நேற்று காலை முதல் மாலை வரை தென்காசி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.