அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டித் திட்டம் தொடக்கம் ஆசிரியர்களைப் பாடாய்ப்படுத்தும் அரசு அதிகாரிகள்! தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!


பள்ளி மாணவர்களுக்கான காலைச் சிற்றுண்டித் திட்டம் என்பது தி.மு.க அரசின் சாதனைத் திட்டங்களின் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் திட்டமாகும். இத்திட்டம் “முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம்” என்ற பெயரில் (15.09.2022) மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு சிறப்பான நடைமுறையில் உள்ளது.


இத்திட்டத்தை அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை மாநிலம் முழுவதும் எழுந்தது. அக்கோரிக்கையை ஏற்று இன்று முதல் இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகள் வரை மாணவர்களுக்கும் விரிவுபடுத்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது என்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் இலட்சக்கணக்கான மாணவர்கள் பயன் பெறும் வாய்ப்புக் கிடைத்துள்ளது.

இத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்த ஆசிரியர்கள் தயாராக உள்ளனர். மாநிலம் முழுவதும் இத்திட்டம் இன்று தொடங்கப்பட உள்ள நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இத்திட்டத்தை தொடங்க தனியாக சமையலறை, தனியாக பொருட்கள் வைப்பறை, குடிநீர் வசதி, மின்சார வசதி, மாணவர்கள் உணவு உண்ண தட்டு, டம்ளர், முதலமைச்சரின் காலைச் சிற்றுண்டித் திட்டம் என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெயர்ப் பலகை மாணவர்கள் அமர்வதற்குப் பாய்கள் ஆகியவற்றைப் பள்ளி ஆசிரியர்களே ஏற்பாடு செய்து வைத்திருக்க வேண்டும் என்று மாநிலம் முழுவதும் அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

மேலும், நாளை திட்டம் தொடங்கும் போது வருகை தரும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு சால்வை அணிவித்து வரவேற்க வேண்டும் என்றும் இவைகளை யெல்லாம் செய்யத் தவறினால் சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டி வருகின்றனர். இதனால் மேற்கண்ட வசதிகளை ஏற்படுத்த செலவாகும் பல்லாயிரக்கணக்கான ரூபாயை ஆசிரியர்களே செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கான அனைத்துப் பொருட்களையும் அரசுப்பள்ளிகளுக்கு தமிழக அரசே வழங்கியுள்ள நிலையில் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு மட்டும் ஆசிரியர்களை அல்லது பள்ளி நிர்வாகத்தை வாங்கச் சொல்வது எவ்வகையில் நியாயம்? பல நூறு கோடி ரூ செலவு செய்து தமிழ்நாடு அரசு தொடங்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இத்திட்டத்திற்கான அனைத்து பொருட்களையும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழ்நாடு அரசே வணங்குவது தான் சரியானது.
மேலும், இத்திட்டத்தை தொடங்குவதற்குள் உதவிபெறும் பள்ளிகளின் ஆசிரியர்களை, அதிகாரிகள் அச்சுறுத்துவதையும், பாடாய் படுத்துவதையும், எல்.டி.6.டி
உளைச்சலுக்கு உள்ளாக்குவதையும் தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்திட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் மாநில அமைப்பு மாநில பொதுச் செயலாளர் மயில், தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *