திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட லாயம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மருது பாண்டியன் ( 34). இவர் லாரியை வீட்டிற்கு அருகில் நிறுத்திவிட்டு பின்னர் காலையில் வந்து லாரியை இயக்கிய போது, லாரியில் இருந்த இரண்டு பேட்டரிகள் திருடு போயிருப்பது தெரிய வந்தது.
இச் சம்பவம் தொடர்பாக வலங்கைமான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் நன்னிலம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் சரவணகுமார் தனிப்படையைச் சேர்ந்த ஏட்டுகள் மனோகரன், அய்யனார், செந்தில்நாதன், கல்யாண சுந்தரம் மற்றும் எழிலரசன் ஆகியோர் சந்தேகத்திற்கு இடமாக சுற்றி திரிந்த சிறுவன் உட்பட மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் வலங்கைமான் பகுதியை சேர்ந்த விக்னேஷ், கபிலன் மற்றும் ஒரு சிறுவன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை செய்ததில் லாரி பேட்டரிகளை தாங்கள் தான் திருடியதாக ஒப்புக்கொண்டனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட லாரி பேட்டரிகள் மேலும் பல இடங்களில் திருடப்பட்ட பேட்டரிகளையும் தனிப்படையினர் கைப்பற்றினர்.
இது தொடர்பாக வலங்கைமான் போலீசார் மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.